`வெப்பக்காற்றுடன் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!’ -வேலூர் மக்களை வறுத்தெடுக்குது சூரியன் | Mercury rises in Vellore

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (20/04/2019)

கடைசி தொடர்பு:19:40 (20/04/2019)

`வெப்பக்காற்றுடன் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!’ -வேலூர் மக்களை வறுத்தெடுக்குது சூரியன்

107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலில் வேலூர் மாவட்டம் தகிக்கிறது. அனல் காற்றுடன் வெயில் சுட்டெரிப்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வெயிலுக்கு துப்பாட்டாவால் தலையை மூடிசெல்லும் கல்லூரி மாணவிகள்

வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகியிருக்கிறது. காலை 8 மணி முதலே வெப்பக்காற்று வீசுகிறது. சுளீரென்று தோலைக் கிழிக்கும் அளவுக்கு வெயில் சுட்டெரிப்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பெரும்பாலானோர் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்கள். வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். வறண்ட காற்று வீசுவதால் குழந்தைகள், முதியவர்கள் மிகவும் சோர்வடைகிறார்கள். ஜூஸ், தர்பூசணி, இளநீர் மற்றும் நீர், மோர் உள்ளிட்ட நீராகாரங்களைப் பருகி உடலை ஓரளவு திடப்படுத்திக்கொள்கிறார்கள். 

வெயிலில் சோர்ந்துசெல்லும் மூதாட்டி

வேலூர் மாவட்டத்தில், கடந்த 11-ம் தேதி நிலவரப்படி 106.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியிருந்தது. 12-ம் தேதி, 105.3 டிகிரி ஃபாரன்ஹீட், 13-ம் தேதி 103.3, 14-ம் தேதி 103.1, 15-ம் தேதி 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் அனல்காற்றுடன் கொளுத்தியது. மறுநாள் 16-ம் தேதி உச்சக்கட்டமாக 107.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் மக்களை வறுத்தெடுத்தது. அதைத் தொடர்ந்து, 17-ம் தேதி 106.2, 18-ம் தேதி 102.6 எனப் பதிவாகியிருந்த வெயிலின் தாக்கம், நேற்று 19-ம் தேதி 105.4 டிகிரி ஃபாரன்ஹீட்டாக சுட்டெரித்தது. இந்த நிலையில், தண்ணீர் பிரச்னையும் தாண்டவமாடுகிறது. மாவட்ட நிர்வாகம், போர்க்கால அடிப்படையில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.