மேற்குத்தொடர்ச்சி மலையில் இறந்துகிடந்த சிறுத்தை! - காரணம் சொல்லும் வனத்துறை | leopard spotted dead in western ghat near papanasam dam

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (20/04/2019)

கடைசி தொடர்பு:20:40 (20/04/2019)

மேற்குத்தொடர்ச்சி மலையில் இறந்துகிடந்த சிறுத்தை! - காரணம் சொல்லும் வனத்துறை

நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், இரண்டு வயதுடைய சிறுத்தை இறந்துகிடந்தது. இதற்கான காரணம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகிறார்கள். 

இறந்து கிடந்த சிறுத்தை

மேற்குத்தொடர்ச்சி மலையில், களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் புலி, யானை, மான், மிளா, சிறுத்தைப்புலி, கரடி உள்ளிட்ட வன விலங்குகளும் அரிய வகை மூலிகைத் தாவரங்களும் உள்ளன. பாதுகாக்கப்பட்ட இந்த மலைப் பகுதி, வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 

இந்த நிலையில், பாபநாசம் வனப்பகுதியில் உள்ள சொறிமுத்து அய்யனார் கோயில் பகுதியில் இன்று, சிறுத்தைக்குட்டி ஒன்று இறந்து கிடந்துள்ளது. கோயில் அருகில் கிடந்ததால், அந்தப் பகுதிக்குச் சென்ற பொதுமக்கள், வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதிகாரிகள் வந்து பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் வனப்பகுதியில் புதைத்தனர்.  

இதுகுறித்து வனத்துறை தரப்பினரிடம் பேசியபோது, ‘’வனப்பகுதிக்குள், காட்டு விலங்குகளுக்கு இடையே சண்டை நடப்பது வழக்கமானது தான். இந்த சிறுத்தைக்கும் வேறு காட்டு விலங்குக்கும் இடையே சண்டை நடந்திருக்கிறது. அதில், சிறுத்தைக்குட்டியின் முதுகெலும்பில் இரு இடங்களில் உடைந்துள்ளது. அதனால் நகர முடியாமல் கிடந்த நிலையில் உயிரிழந்துள்ளது’’ என்று தெரிவித்தனர்.