`மோடியைப் போல பலவீனமான பிரதமரைக் கண்டதில்லை!' - பிரியங்கா காந்தி | Priyanka Gandhi Speech in Wayanad

வெளியிடப்பட்ட நேரம்: 21:01 (20/04/2019)

கடைசி தொடர்பு:21:01 (20/04/2019)

`மோடியைப் போல பலவீனமான பிரதமரைக் கண்டதில்லை!' - பிரியங்கா காந்தி

“மோடியைப் போல பலவீனமான பிரதமரைப் பார்த்ததில்லை” என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

பிரியங்கா காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். இந்நிலையில், ராகுல் காந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் இன்று பிரசாரம் செய்தார். இந்நிலையில், பிரதமர் மோடியை எதிர்த்து, வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், தனது பேச்சில் மோடியை சற்று அதிமாகவே தாக்கிப் பேசினார் பிரியங்கா காந்தி.

“நான் ஹெலிகாப்டரில் வரும்போது, வயநாட்டின் அழகைக் கண்டு பிரமித்தேன். இங்குள்ள பழங்குடிகளின் கலாசாரத்தை நான் மதிக்கிறேன். பல்வேறு தரப்பு மக்கள் இருந்தாலும், ஒற்றுமையாக வாழ்வதில் வயநாடு, நாட்டின் மற்ற பகுதிகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறது. உத்தரப்பிரதேசமும் நம் தேசம்தான். கேரளாவும் நம் தேசம்தான். தமிழகமும் நம் தேசம்தான். அதனால்தான், ராகுல் இங்கு போட்டியிடுகிறார். நான் பிறந்ததில் இருந்து, பார்த்துவரும் நபருக்காக வாக்கு கேட்டு வந்துள்ளேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக எவ்வளவோ விமர்சனங்களை ராகுல் கடந்து வந்துள்ளார்.

பி.ஜே.பி, மக்களின் பேரதரவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. மக்கள், பி.ஜே.பி-யின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், ஆட்சியில் அமர்ந்த அந்த நொடியில் இருந்து பி.ஜே.பி அந்த நம்பிக்கையைப் பொய்த்துவிட்டது. மக்களிடம் பிரிவினையைத் தூண்டிவிடுவதுதான் தேசியமா? உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகளையும், மக்களையும் சிறைக்கு அனுப்புவதும்தான் தேசியமா?

பிரியங்கா காந்தி

ஐந்து ஆண்டுகளில், மோடி ஒரு முறைகூட தனது தொகுதியில் கால் வைக்கவில்லை. பி.ஜே.பி-யைப் போல பலவீனமான அரசையோ, மோடியைப் போல பவவீனமான பிரதமரையோ நான் இதற்கு முன்பு கண்டதில்லை” என்று ஆவேசமாகப் பேசினார், பிரியங்கா காந்தி.

ராகுல் காந்திக்கு மொழிபெயர்த்து கவனம் ஈர்த்த ஜோதி விஜயகுமார், இன்று  ஒரு கூட்டத்தில் பிரியங்காவுக்கு மொழிபெயர்ப்பு செய்தார். பிரியங்கா பேசி முடிக்கும் அடுத்த நொடியே, அதே மொழி நடையில் ஜோதி விஜயகுமார் மொழிபெயர்க்க, மக்களிடம் அப்ளாஸ் அள்ளியது. இதனால், பிரியங்கா மிகுந்த ஆச்சர்யத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஜோதி விஜயகுமாரைப் பார்த்தார்.