`கட்டடம் வேண்டாம்; ஆய்வுசெய்யுங்கள்!' - அரசுக்கு தொல்லியல் ஆர்வலர்கள் வேண்டுகோள் | archaeologists demand to government

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (20/04/2019)

கடைசி தொடர்பு:22:00 (20/04/2019)

`கட்டடம் வேண்டாம்; ஆய்வுசெய்யுங்கள்!' - அரசுக்கு தொல்லியல் ஆர்வலர்கள் வேண்டுகோள்

கிருஷ்ணன்கோயில் அருகே, ரூ.3.5 கோடி மதிப்பில் வட்டார போக்குவரத்து அலுவலகக் கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தில், ஏராளமான முதுமக்கள் தாழிகள் இருப்பதால், தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

முதுமக்கள் தாழி

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோயில் அருகே, 4.05 ஏக்கர் பரப்பளவில் ரூ.3,57,80,000 மதிப்பீட்டில் இரண்டு தளங்கள் மற்றும் ஓட்டுநர் தேர்வு தளத்துடன்கூடிய ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்துக்கான புதிய அலுவலகம் அமைய உள்ளது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடந்த மாதம் இதற்காக அடிக்கல் நாட்டினார். மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த இடத்தைச் சுற்றி ஏராளமான முதுமக்கள் தாழிகள் உள்ளன.

எச்சம்

``அந்த இடத்தைத் தோண்டி, முதுமக்கள் தாழியை அகழ்வாராய்ச்சி செய்வதன்மூலம் நிறையப் பழங்காலப் பொருள்கள் கிடைக்கும். கீழடி, ஆதிச்சநல்லூர் போல வரலாற்றையே மாற்றக்கூடிய பொருள்கள் கிடைத்தாலும் ஆச்சர்யப்பட வேண்டாம். எனவே, வேறு இடத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தைக் கட்டி, இங்கே ஆய்வு நடத்த வேண்டும்'' எனத் தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொல்லியல்

தங்க முனியாண்டிஇதுகுறித்து சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் தங்க முனியாண்டி மற்றும் மதுரை தியாகராஜர் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் முத்துக்குமார் ஆகியோர் கூறும்போது, ``முந்தைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள், இறந்த பின் அவர்களின் உடலோடு அவர்கள் பயன்படுத்திய பொருள், விரும்பிய பொருள்களைத் தாழியில் வைத்து புதைத்துள்ளனர். தற்போது முதுமக்கள் தாழிகள் காணப்படும் இடத்தின் அருகே உள்ள விழுப்பனூர் பகுதியில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் இருந்து மண்ணால் செய்யப்பட்ட அழகிய கிண்ணங்கள் கிடைத்தன. அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட ஆய்வில், தற்போது வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைய உள்ள இடத்தில், நிறைய முதுமக்கள் தாழிகளைக் கண்டறிந்தோம். கல்பதுக்கை, கற்குவியல் போன்றவையும் இங்கே நிறைய காணப்பட்டன.

இந்த முதுமக்கள் தாழிகள், பெருங்கற்காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம். ஏற்கெனவே, இந்த இடத்தைச் முத்துக்குமார்சுற்றி பல தாழிகள் இருந்தன. ஆனால் தற்போது, நிறையக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், அவை எல்லாம் எங்கே போயின எனத் தெரியவில்லை. ஏற்கெனவே பூமிபூஜை போட்டபோது நிறையத் தாழிகள் உடைந்துள்ளன. எஞ்சிய இடத்திலும் கட்டடம் கட்டினால், ஆய்வு நடத்த முடியாது. இந்தப் பகுதியின் வரலாற்றைக் கணக்கிட முடியாது. செப்பேடு, இலக்கியம் பூமிக்கு மேலே கிடைக்கும் தொன்மை. முதுமக்கள் தாழி பூமிக்கு கீழே கிடைக்கும் தொன்மை. இப்படிப்பட்ட தொல்லியல் சார்ந்த இடத்தில், அரசே கட்டடம் கட்டி தொன்மையை அழிப்பது தவறு.

வரலாறு என்பது ஒரு இனத்தின் பெருமை. ஒரு இனம் எத்தனை ஆண்டுகள் முந்தையது, அதன் நாகரிகம் எப்படியானது என்பன போன்றவற்றை தொல்லியல் மூலமாகத்தான் கணக்கிட முடியும். இந்த இடத்தை தொல்லியல் துறையினர் முழுமையாக ஆய்வு செய்தால், இதன் உண்மையான காலத்தைக் கணிக்க முடியும். எனவே, தொல்லியல் வல்லுநர்கள் கொண்ட குழுவை நியமித்து, இந்த இடத்தை முழுவதுமாக ஆய்வுசெய்ய வேண்டும். அது, அரசின் பொறுப்பு. அங்கே கட்டடம் எதுவும் கட்டக் கூடாது'' என்று தெரிவித்தனர்.