` எல்லாத்தையும் டி.டி.வி அண்ணன் பார்த்துக்கொள்வார்!' - எம்.எல்.ஏ பதவி சிக்கல்குறித்து `கள்ளக்குறிச்சி' பிரபு | kallakurichi mla prabhu talks about his status

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (20/04/2019)

கடைசி தொடர்பு:21:20 (20/04/2019)

` எல்லாத்தையும் டி.டி.வி அண்ணன் பார்த்துக்கொள்வார்!' - எம்.எல்.ஏ பதவி சிக்கல்குறித்து `கள்ளக்குறிச்சி' பிரபு

'எல்லாத்தையும் டி.டி.வி.அண்ணன் பார்த்துக்கொள்வார்' என கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு கூறியுள்ளார்.

டி.டி.வி தினகரன்

அ.ம.மு.க-வை தனிக் கட்சியாகப் பதிவுசெய்ததுடன், அதன் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் டி.டி.வி தினகரன். இதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.  சசிகலா அனுமதி இல்லாமல் அவசர கதியில் டி.டி.வி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க-வை கைப்பற்றுவதற்காகத் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் எனக் கூறிய நிலையில், கட்சியாகப் பதிவுசெய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. சசிகலாவை ஓரம்கட்டிவிட்டு தன்னை முன்னிலைப்படுத்துகிறார் டி.டி.வி என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கு, ``நீதிமன்றத்தின் கட்டாயத்தின் பேரிலேயே கட்சியைப் பதிவுசெய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பதிவு செய்தால்தான் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பொதுச்சின்னம் கிடைக்கும். சசிகலாவின் ஒப்புதலோடுதான் அனைத்தும் நடக்கிறது. 

கள்ளக்குறிச்சி பிரபு

அவருக்காக தலைவர் பதவி ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது" என டி.டி.வி. தினகரன் தரப்பில் பதில் தரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இன்னொரு சிக்கல் எழுந்துள்ளது. அ.ம.மு.க-வை தனிக் கட்சியாகப் பதிவுசெய்ததால், இனி அ.தி.மு.க-வுக்கு தினகரன் உரிமை கோர முடியாத நிலை என்பதைத் தாண்டி, அவருக்கு ஆதரவாக இருக்கும் கள்ளக்குறிச்சி பிரபு உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ-க்களும் அ.ம.மு.க-வில் பதவிவகித்தால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி அவர்களது பதவிகளுக்கும் ஆபத்து ஏற்படும். இதனை அந்த மூவரும் எப்படி கையாளப்போகிறார்கள் என்பது கேள்வியாகவே இருக்கிறது.

இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவிடம் பேசினோம். அதற்குப் பதிலளித்த அவர், ``எல்லாம் டி.டி.வி அண்ணன் பார்த்துக்கொள்வார். இப்போதைக்கு அவர் எதுவும் இதுகுறித்துப் பேசவில்லை. எனக்கு எல்லா ஆலோசனைகளும் அவர்தான் கூறுவார். அவர் என்ன ஆலோசனை சொல்கிறாரோ அதன்படி நடப்பேன். தனியாக எந்த ஆலோசனையும் நான் மேற்கொள்ளவில்லை" என முடித்துக் கொண்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க