தாமிரபரணியில் கலக்கும் பாதாளச் சாக்கடை கழிவு நீர்! - நீதிமன்றம் ஆய்வு | judicial committee has checked the UGD water entered in thamirabharani river

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (21/04/2019)

கடைசி தொடர்பு:06:30 (21/04/2019)

தாமிரபரணியில் கலக்கும் பாதாளச் சாக்கடை கழிவு நீர்! - நீதிமன்றம் ஆய்வு

நெல்லை மாநகராட்சியின் பாதாளசாக்கடைக் கழிவுநீர், பாசனக்கால்வாய் வழியாக தாமிரபரணி ஆற்றில் கலந்து, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதுகுறித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இதுகுறித்து  விசாரித்த நீதிமன்றம், வழக்கறிஞர்கள் தலைமையில் ஆணையக் குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. 

கழிவு நீர் கலப்பு

நெல்லை மாநகராட்சியில், கடந்த 2008-ம் ஆண்டு பாதாளசாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஒன்றரை லட்சம் வீடுகளில் உள்ள கழிவுநீர் அனைத்தும் குழாய் மூலமாக நெல்லை-சங்கரன்கோயில் சாலையில் உள்ள ராமையன்பட்டி உரக்கிடங்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்துக்கு வந்து சேருகிறது. அங்குள்ள எட்டுத் தொட்டிகளில் அது தேக்கப்பட்டு, சுத்திகரித்த பின்னர், வெளியேற்றப்படுகிறது. 

ஆனால், இந்த சுத்திகரிப்பு மையத்தில் இருந்து கழிவுநீர் அப்படியே வெளியேற்றப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.  கழிவுநீரை நெல்லை மாநகராட்சி அதிகாரிகள், நெல்லைக் கால்வாயில் கலந்துவிடுவதாகவும் புகார் எழுந்தது. அந்தத் தண்ணீர், அருகில் உள்ள பாசனக் குளங்கள் மூலமாக விவசாய நிலத்தில் பாய்வதுடன்,  இறுதியில் தாமிரபரணி நதியில் கலக்கிறது. இதனால், சுற்றச்சூழல் பாதிக்கப்படுவதுடன் தாமிரபரணி நதியும் கெட்டுப்போகிறது. 

சுத்திகரிப்பு மையம்

கழிவுநீர் காரணமாக ராமையன்பட்டி பகுதியில் துர்நாற்றம் அடிப்பதுடன், தொற்று நோயும் பரவிவருகிறது. ஏற்கெனவே ஒன்றரை லட்சம் வீடுகளின் கழிவுநீர் இந்தப் பகுதிக்கு வந்துசேரும் நிலையில், தற்போது நெல்லை மாநகராட்சி மூலமாக பாதாளசாக்கடைத் திட்டத்தை விரிவாக்கம்செய்யும் பணிகள் நடக்கின்றன. அதனால், இந்தப் பகுதியில் கூடுதலாகக் கழிவுநீர் வரும்நிலை இருப்பதால், இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றனர். அதனால், ராமையன்பட்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், கால்வாயில் கழிவுகள் மற்றும் சுத்திகரிக்கப்படாத தண்ணீர் கலப்பதைக் கண்டித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளவில்லை. 

வழக்குத் தொடர்ந்த காட்டுராஜாஅதனால், ராமையன்பட்டி பகுதியைச் சேர்ந்த காட்டுராஜா என்பவர், இதுகுறித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு நீதிபதிகள் கிருபாகரன் , சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாநகராட்சியிடம் இதுகுறித்து அறிக்கை கேட்டனர். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் சார்பில்  எந்த பாதிப்பும் இல்லை என்று அறிக்கை அளித்தது. மாநகராட்சி நிர்வாகம் தவறான தகவலைக் கொடுத்திருப்பதாக காட்டுராஜா மேல்முறையீடு செய்தார். இதுபற்றி விசாரித்த நீதிபதிகள், வழக்கறிஞர் ஆணையக்குழுவை அமைத்து ஆய்வுசெய்ய உத்தரவிட்டது. 
    
அதனால், வழக்கறிஞர் ஆணைக்குழுவில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் ஜோஸ்வா, ஜீவசுந்தரி ஆகியோர் இன்று ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் , சுத்திகரிக்கப்படாமலே கழிவுகளோடு நீர் கலக்கும் நெல்லைக் கால்வாய் , விளைநிலங்கள், குளங்கள், தாமிரபரணி ஆற்றுப்பகுதி ஆகிய இடங்களைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து விசாரணை நடத்தினர். 
    
இதுகுறித்து ஆணையக்குழு வழக்கறிஞர்களான ஜோஸ்வா, ஜீவசுந்தரி ஆகியோர் கூறுகையில், ’’உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கழிவுநீர் கலக்கப்படும் இடம், அவை கால்வாயில் கலக்கும் இடங்கள் ஆகிய பகுதிகளில் ஆய்வுசெய்துள்ளோம் , பாதிக்கப்பட்ட இடங்களாகக் கூறப்படும் அனைத்து இடங்களிலும் தண்ணீர் மாதிரிகளை எடுத்துள்ளோம். பாதிக்கப்பட்ட இடங்களைப் புகைப்படங்களாகவும் எடுத்திருக்கிறோம். இதுகுறித்து அறிக்கை தயார்செய்து, வரும் 24-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம்’’ என்று தெரிவித்தனர்.