`தமிழகத்தில் மதுவால் வரும் வருமானத்தை விட இழப்புகள்தான் அதிகம்!' - மருத்துவர்கள் வேதனை | Treatment cost is high more than tasmac income says doctors

வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (21/04/2019)

கடைசி தொடர்பு:08:10 (21/04/2019)

`தமிழகத்தில் மதுவால் வரும் வருமானத்தை விட இழப்புகள்தான் அதிகம்!' - மருத்துவர்கள் வேதனை

தமிழகத்தில் மதுபானங்கள் வருவாயை விட 3 மடங்கு அரசுக்குச் செலவுதான் ஏற்படுகிறது என மருத்துவர்கள் வேதனை.

மீனாட்சி மிஷன்

ஏப்ரல்- 19 உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இதனை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பாக கல்லீரல் நோய்கள் மற்றும் அதன் சிக்கல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பயிலரங்கு  நடத்தப்பட்டது. இதில் மருத்துவர்கள் ரமேஷ், மோகன், அழகம்மை உள்ளிட்டோர் கலந்துகொண்டு விளக்கினர். அப்போது அவர்கள் கூறுகையில்," கல்லீரல் பாதிப்பால் இந்தியாவில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கல்லீரல் நோய் பாதிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்திய அளவில் 10வது இடத்தில் இந்நோய் பாதிப்பு உள்ளது. தமிழ்நாட்டில் மிகவும் பொதுவாக நிலவும் கல்லீரல் கோளாறு ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ் மற்றும் கொழுப்பு கல்லீரல் காரணமாக நாள்பட்ட வைரல் ஹெபடைடிஸ் மது சார்ந்த கல்லீரல் நோய்கள் குறிப்பிடதக்கவை. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதை  முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால் மது பலரையும் கல்லீரல் பாதிப்படைய செய்கிறது.

 எனவே மது பழக்கத்தை முற்றிலுமாக  நிறுத்தவேண்டும். அரசும் இதனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும். அரசுக்கு மதுவால் 1 கோடி வருமானம் வந்தால் அரசு மருத்துவமனை மூலம் மதுவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 3 கோடி செலவு செய்யவேண்டிவருகிறது. மதுவால் ஒரு பங்கு வருமானத்திற்கு மூன்று பங்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே டாஸ்மாக் வருமானம் வருவது போல் இன்னொரு பக்கம் இழப்பு ஏற்படுத்துகிறது'' எனத் தெரிவித்தனர்.