17மணிநேர போராட்டம் வீண்; கைவிரித்த மருத்துவர்கள் - நீலகிரி கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! | Doctors didn't giving proper treatment for Pregnant woman at Nilgiri coonoor

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (21/04/2019)

கடைசி தொடர்பு:08:40 (21/04/2019)

17மணிநேர போராட்டம் வீண்; கைவிரித்த மருத்துவர்கள் - நீலகிரி கர்ப்பிணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

.நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மின்னல் தாக்கியதில் படுகாயம் அடைந்த பழங்குடி பெண் தீபாவுக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை இல்லாத சோகம்.

கர்ப்பிணி பெண்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக, அவ்வப்போது, மழை பெய்து வந்தது. நேற்று மாலை குன்னூரை அடுத்துள்ள பில்லூர் மட்டம், யானைப்பள்ளம், சின்னாளக்கோம்பை, உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது சின்னாளக்கோம்பை  குடியிருப்பு அருகே நேற்று மாலை சுமார் 7:00 மணியளவில், அதிக வெளிச்சத்துடனும், சப்ததத்துடன் மின்னல் தாக்கியது. இதில் சின்னாளக்கோம்பையை சேர்ந்த இருளர் பழங்குடியினர்  நிலைகுலைந்து போயினர். மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட மின் விளைவால் 11 பேர் காயமடைந்தனர்.  ஊர்மக்கள் உடனடியாக 108க்கு தகவல் தெரிவித்தனர்.

வனப்பகுதி என்பதாலும் தொடர் மழையின் காரணமாகவும், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்ததால், எந்த வாகனமும் நள்ளிரவில் சின்னாளக்கோம்பை கிராமத்திற்கு செல்ல முடியவில்லை. யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நிறைந்துள்ள பகுதி என்பதால் தொட்டில் கட்டியும் தூக்கி வர முடியவில்லை. செய்தவதறியாது எந்த வெளி தொடர்பு இல்லாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் சென்ற ஆம்புலென்சும் நடுவழியில் சேற்றில் சிக்கியது.

மின்னல் தாக்கியவர்கள் காயமடைந்தவர்கள் சுமார் 17 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு, வனத்துறையினர், வருவாய் துறையினர், காவல்துறையினர் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து காயமுற்றவர்களில் 8 பேரை ஒரு ஆம்புலென்ஸ் மூலமும், 3 பேரை மற்றொரு வாகனத்திலும் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இதில், 7 பெண்கள் உட்பட 11 பேர் காயமடைந்திருந்தனர். அதிலும் குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்ணான தீபாவுக்கு,  மின்னல்தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. எந்த முதலுதவியும் இல்லாமல் 17 மணி நேரம் காத்திருந்து, மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். ஆனால், அவருக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் இல்லை என மருத்துவமனையில் தெரிவித்தனர்.

மின்னல் தாக்கியதில் அவருடைய இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.வலியால் துடித்து வருகிறார் .தீபா வயிற்றில் உள்ள கரு பாதிப்படைந்துள்ளதா அல்லது நல்ல நிலைமையில் உள்ளதா உறவினர் கேட்டதற்கு,  பெண் மருத்துவர்கள் இல்லை ஊட்டி குன்னூரில் ஸ்கேன் இல்லை, திங்கட்கிழமைக்குப் பிறகே சிகிச்சை மேற்கொள்வோம் என மருத்துவர்கள் தெரிவித்ததால் தீபா உறவினர்கள் அதிர்ந்து போயினர். மின்னல் தாக்கிய ஒரு பழங்குடியின கர்ப்பிணிப் பெண்ணிற்கு 48 மணி நேரத்திற்கு பிறகுதான் ஸ்கேன் எடுத்து சிகிச்சை துவங்குவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளது அனைவரின் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.