"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்!" - செந்தில் பாலாஜி புகழாரம் | Stalin is the only leader to protect the people of Tamil Nadu says Senthil Balaji

வெளியிடப்பட்ட நேரம்: 10:25 (21/04/2019)

கடைசி தொடர்பு:10:25 (21/04/2019)

"தமிழக மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்!" - செந்தில் பாலாஜி புகழாரம்

"தளபதி மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கக்கூடிய தேர்தல்தான் அரவக்குறிச்சி இடைத்தேர்தல்" என்று கரூர் பரமத்தியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் செந்தில் பாலாஜி பேசினார்.
  

 செந்தில் பாலாஜி பேசியபோது...

கடந்த 18 ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், காலியாகவுள்ள ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் மற்றும் திருபரங்குன்றம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் மே 19 ம் தேதி இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.


 கூட்டம்

தி.மு.க முந்திக்கொண்டு, நான்கு தொகுதிகளுக்கும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அ.தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்டக் கட்சிகள் வேட்பாளர்களைத் தேர்வு செய்து வருகிறார்கள். அந்தவகையில், அரவக்குறிச்சி தொகுதிக்கு தி.மு.க கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மற்ற தொகுதிகளின் தி.மு.க வேட்பாளர்களுக்கு முன்பாக, படுஸ்பீடாக செந்தில் பாலாஜி தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டார். கரூர் மாவட்டம், க.பரமத்தியில் 30000 பேர் திரண்ட பிரமாண்ட செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி, மற்றிக் கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தினார்.


 செந்தில் பாலாஜி பேசியபோது....

அந்த கூட்டத்தில் பேசிய செந்தில் பாலாஜி,"தமிழக மக்களை பாதுகாக்கக்கூடிய ஆளுமை கொண்ட ஒரே தலைவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்தான். அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் வேட்பாளராக எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தளபதியின் கரத்தைப் பிடித்து, கழகத்தில் இணைத்துக் கொண்ட எனக்கு, கரூர் மாவட்ட பொறுப்பாளர் என்ற உயரிய பதவியும், அரவக்குறிச்சி இடைத் தேர்தல் வேட்பாளர் வாய்ப்பும் அவரால் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு நன்றிக்கடனாக, நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மட்டுமல்ல, அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றியையும் சமர்ப்பித்து, இனிவரும் காலங்களில் எந்த தேர்தலாக இருந்தாலும், கரூர் மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில், நாம் அனைவரும் இணைந்து செயலாற்றி தளபதியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்" என்றார்.