‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை!’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் | Rowdy killer near Vellore court

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (21/04/2019)

கடைசி தொடர்பு:11:00 (21/04/2019)

‘வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி கொடூரக் கொலை!’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

வேலூர் நீதிமன்றம் அருகில் ரௌடி ஓட ஓட விரட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

கொலை செய்யப்பட்ட செல்வராஜ்

வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ‘ஜி’ என்கிற செல்வராஜ் (36). மத்திய துணை ராணுவப் படையில் (சி.ஆர்.பி.எஃப்) வீரராக பணியாற்றியவர். கடந்த 2007-ம் ஆண்டு சத்துவாச்சாரியைச் சேர்ந்த ஒரு பெண்ணை செல்வராஜ் காதலித்துள்ளார். அந்தப் பெண் இவரின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், அந்தப் பெண்ணின் குடும்பத்தைக் கொலை செய்வதற்காக வெடிகுண்டு எடுத்துவந்து அவரின் வீட்டில் வைத்துள்ளார். குண்டு வெடிப்பதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, செல்வராஜ் கைதுசெய்யப்பட்டார். துணை ராணுவப்படையிலிருந்தும் நீக்கப்பட்டார். 

ஜாமினில் வெளிவந்த அவர், 2010-ம் ஆண்டு கே.வி.குப்பத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்தார். சில மாதங்களில் மனைவி பிரிந்துசென்றதால் ஆத்திரமடைந்த செல்வராஜ், மாமனார் வீட்டுக்குத் தீ வைத்துள்ளார். மேலும், 2014-ம் ஆண்டு தனது மாமனார் பெருமாளை செல்வராஜ் கொலை செய்தார். இந்த வழக்கிலும் சிறைக்குச் சென்றுவிட்டு ஜாமினில் வெளியே வந்த செல்வராஜ்  கடந்த ஆண்டு சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோயில் தேருக்கு தீ வைத்தார். இதிலும் கைதுசெய்யப்பட்டு பிறகு ஜாமினில் வெளிவந்த செல்வராஜ் மது அருந்திவிட்டு ஊருக்குள் அடிக்கடி பிரச்னை செய்துவந்துள்ளார்.

இந்த நிலையில், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் 20-ம் தேதி இரவு செல்வராஜை ஒரு கும்பல் அரிவாளுடன் சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியது. பலத்த வெட்டுக்காயங்களுடன் செல்வராஜ் தப்பி ஓடினார். நீதிமன்றம் அருகில் உள்ள ஆவின் பால் பண்ணை முன்பு அந்த கும்பல் மீண்டும் சுற்றிவளைத்து கொடூரமாக வெட்டி கொலை செய்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் துடிதுடித்து உயிரிழந்தார். கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். தகவலறிந்து வந்த சத்துவாச்சாரி போலீஸார், செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.