`அ.தி.மு.கவுக்கு மக்களவை தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது!’ - ஐ.பெரியசாமி | aiadmk can't get deposit in the lok sabha election says i.periyasamy

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (21/04/2019)

கடைசி தொடர்பு:11:30 (21/04/2019)

`அ.தி.மு.கவுக்கு மக்களவை தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது!’ - ஐ.பெரியசாமி

"ஆளும் அ.தி.மு.க அரசுக்கு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் டெபாசிட் கூடக் கிடைக்காது என்பது என்னுடைய கணிப்பு" என்று தி.மு.க முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கரூரில் அதிரடியாகப் பேசினார்.

 ஐ.பெரியசாமி பேசும்போது...

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் மே 19 ம் தேதி நடைபெற இருக்கிறது. தி.மு.க சார்பில் அந்த கட்சியின் வேட்பாளராக செந்தில் பாலாஜி அறிவிக்கப்பட்டிருப்பதை ஒட்டி, திராவிட முன்னேற்றக் கழக செயல்வீரர்கள் கூட்டம் கரூர் பரமத்தியில் நடைபெற்றது.


 கூட்டம்

இந்நிகழ்ச்சியில், தி.மு.க மாநில விவசாய அணி செயலாளர் கரூர் சின்னசாமி, மாநில நெசவாளர் அணி செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி, கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, இந்திய ஜனநாயக கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைவர் கந்தசாமி, கொங்குநாடு தேசிய கட்சி முக்கிய மாநில பொறுப்பாளர் விசா.சண்முகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


 ஐ.பெரியசாமி பேச்சு....

இந்த நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசியபோது,'நாம் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்திட வேண்டும்' என்று பலரும் வலியுறுத்திப் பேசினார்கள். அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. 'பம்பரமாக சுழன்று பணியாற்ற வேண்டும், சோர்வாக இருக்கக் கூடாது, தேர்தல் களத்தில் எவ்வளவு மக்கள் ஆதரவு இருந்தாலும், இன்னும் அதிக ஆதரவை திரட்ட பணியாற்றிட வேண்டும்'  என்றுதான் நானும் சொல்வேன். அப்படி மக்களுடைய ஆதரவைத் திரட்டி, மே மாதம் 19ஆம் நாள் நடக்கவுள்ள அரவக்குறிச்சி இடைத்தேர்தலில், நம்முடைய எதிரிகள் யாரும் நடமாடக் கூடாது. அந்த அளவுக்கு நாம் பணியாற்ற வேண்டும். நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்களித்துவிட்டு, அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள், நாம் எந்தத் தொகுதியிலாவது வெற்றி பெறுவோமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி மவுனப் புரட்சியை நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆளும் எடப்பாடி அரசை தூக்கி எறிந்து இருக்கிறார்கள்.


 கூட்டம்

நிச்சயம் மே 23ஆம் தேதிக்கு பிறகு மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும். இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி உள்ளிட்ட 22 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி வெற்றி பெறும். மத்தியில் ராகுல் காந்தி பிரதமராக ஆட்சிப் பொறுப்பை ஏற்பார். மோடிக்கு மக்கள் டாட்டா காட்டி விட்டார்கள். எனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு செயல்வீரர்கள் கூட்டத்தை நான் கண்டதில்லை. கடந்த மூன்று மாதங்களாக நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்காக உழைத்துவிட்டு, இன்று காலையே இடைத்தேர்தல் பிரசாரத்தை செந்தில் பாலாஜி துவங்கியிருப்பது, மறைந்த முத்தமிழறிஞர் கலைஞரின் ஓய்வரியா உழைப்பை நினைவுபடுத்துகிறது. மே மாதம் இருபத்தி மூன்றாம் தேதி வெளிவர உள்ள தேர்தல் முடிவுகளில் ஆளும்கட்சியாக தி.மு.க மாறும். ஆளும் அரசுக்கு எந்தத் தொகுதியிலும் டெபாசிட் கிடைக்காது என்பது என்னுடைய கணிப்பாக இருக்கிறது" என்றார்.