“திருப்பதிஏழுமலையானுக்கு சொந்தமான 1371 கிலோ தங்கம் - சென்னையில் பிடிபட்ட கண்டெய்னரின் பின்னணி | 1381kg gold handover to ttd authorities in tirupati

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (21/04/2019)

கடைசி தொடர்பு:13:30 (21/04/2019)

 “திருப்பதிஏழுமலையானுக்கு சொந்தமான 1371 கிலோ தங்கம் - சென்னையில் பிடிபட்ட கண்டெய்னரின் பின்னணி

தமிழகத்தில் தேர்தல் நடைபெறுவதற்கு முதல்நாள், ஏப்ரல் 17-ம் தேதி சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலையில், பத்து ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களோடு மூன்று கண்டெய்னர் லாரிகள் பயணமாவதாக காவல்துறைக்கும், தேர்தல் பறக்கும் படையினருக்கும் தகவல் கிடைத்தது. 2016 சட்டமன்ற தேர்தலின் போது, 540 கோடி ரூபாயுடன் மூன்று கண்டெய்னர் லாரிகள் திருப்பூர் அருகே சிக்கிய அனுபவம் இருந்ததால், விரைந்து செயல்பட்ட காவல்துறை திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரம் கிராமம் அருகே பயணித்த அந்த கண்டெய்னர் லாரிகளை மடக்கிச் சோதனையிட்டனர்.

தங்கம்

மொத்தம் 56 பெட்டிகளில், பெட்டிக்கு 22 கிலோ வீதம் 1381 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. கண்டெய்னர் லாரிகளுக்கு பாதுகாப்பாக வந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கியைச் சேர்ந்த அதிகாரிகள், இவை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான தங்கம் என்றதோடு, அதற்கான ஆவணங்களையும் காட்டினர். இத்தங்கத்தின் மொத்த மதிப்பு 450 கோடியாகும். வங்கி அதிகாரிகள் அளித்த ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்த தேர்தல் தமிழக காவல்துறை, தேர்தல் சமயம் என்பதால் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் தங்கம் நிரம்பிய கண்டெய்னர் லாரிகளை பூந்தமல்லி காவல்நிலையத்துக்குக் கொண்டுவந்தனர்.

சென்னை அருகே மூன்று கண்டெய்னர்கள் நிறையத் தங்கம் பிடிபட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானவுடன் மொத்த தமிழகமும் பரபரப்பானது. அதேவேளையில், திருப்பதி தேவஸ்தான போர்ட்டு கடிதத்துடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் பஞ்சாப் நேஷ்னல் வங்கி அதிகாரிகளும் வந்தனர். உரிய ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பின்னர், தங்கம் இருந்த கண்டெய்னர் லாரிகள் விடுவிக்கப்பட்டன. இவை நேற்று மாலை திருப்பதி சென்று சேர்ந்திருப்பதாக தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தங்கம்

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், “ஆந்திரா வங்கியிலும், பஞ்சாப் நேஷ்னல் வங்கியிலும் திருப்பதி ஏழுமலையானுக்குக் காணிக்கை செலுத்தப்பட்ட 8500 கிலோவுக்கும் அதிகமான தங்கம் மூன்று வருடத்துக்கு முன்னர் சேமிக்கப்பட்டது. இதில், பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் சேமிக்கப்பட்ட 1381 கிலோ தங்கத்துக்கு வட்டி விகிதம் நாங்கள் எதிர்பார்த்த அளவில் வழங்கவில்லை. இதனால், இருப்புக் காலம் முடிந்தவுடன் அவற்றைத் தேவஸ்தான அலுவலகத்தில் ஒப்படைக்கச் சொன்னோம். தேர்தல் நேரத்தில் வங்கி அதிகாரிகள் தங்கத்தை கொண்டு சென்றதால், தேவையற்ற குழப்பம் ஏற்பட்டுவிட்டது. தற்போது உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, தேவஸ்தானத்துக்குச் தங்கத்தை கொண்டு வந்துவிட்டோம்.” என்றனர். 

கண்டெய்னர் லாரியில் இருந்த தங்கக் கட்டிகள், ஸ்விட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக லேபிள் இருந்ததும் தங்கத்தை தமிழக காவல்துறை விடுவிக்காததற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது. ஏழுமலையானுக்குக் செலுத்தப்படும் காணிக்கை நகைகளாக இருப்பதால், அவற்றை உருக்கித் தங்க பிஸ்கட்டுகளாக மாற்றிச் சேமிக்குமாறு பஞ்சாப் நேஷ்னல் வங்கியைத் திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டதாம். இதனடிப்படையில் ஸ்விட்சர்லாந்து கொண்டு செல்லப்பட்ட தங்க நகைகள், அங்கு உருக்கப்பட்டுத் தங்க பிஸ்கட்டுகளாக சென்னைக்கு வந்ததாம். இவற்றை லேபிள் பிரிக்காமல் கொண்டு சென்ற போது தான், தமிழக காவல்துறையும், தேர்தல் பறக்கும்படையினரும் கைப்பற்றியதாக வங்கி அதிகாரிகள் அளித்த விளக்கத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. 

மூன்று நாட்களுக்குப் பிறகு ஏழுமலையானின் 1381 கிலோ தங்கம் திருப்பதி வந்ததையடுத்து, தேவஸ்தான அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.