`வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்க கலெக்டரை மாற்ற வேண்டும்!’ - மதுரை சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் | Madurai CPIM candidate su venkatesan urges EC to transfer Madurai Collector

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (21/04/2019)

கடைசி தொடர்பு:16:00 (21/04/2019)

`வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்க கலெக்டரை மாற்ற வேண்டும்!’ - மதுரை சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன்

மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மதுரை  மருத்துவக்கல்லூரி அறைக்குள் தாசில்தார் நுழைந்து ஆவணங்களை எடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சு.வெங்கடேசன்

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க.சார்பில் ராஜ்சத்யனும், சி.பி.எம் சார்பில் சு.வெங்கடேசனும், அ.ம.மு.க.சார்பில் டேவிட் அண்ணாதுரையும் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிந்து வாக்கு இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரிக்குள் வைக்கப்பட்டுள்ளது. இதைக் கண்காணிக்க இரண்டு தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையின்  மூன்றடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று இரவு தேர்தல் பணியில் ஈடுபட்ட தாசில்தார் சம்பூர்ணம் என்பவர் தபால் வாக்குகள் மற்றும் தேர்தல் பதிவு ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்திருக்கிறார்.  அங்குள்ள ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்துள்ளார். இதை அங்கு  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள கட்சியினர் கண்டுபிடித்து தகவல் சொன்னதால் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன்,  உட்பட கட்சியினர் அங்கு திரண்டனர். தற்போது சம்பந்தப்பட்ட தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி

 நம்மிடம் பேசிய சி.பி.எம். வேட்பாளர் சு.வெங்கடேசன், ``பாதுகாப்பு மிகுந்த வாக்கு எண்ணும் மையத்துக்கு தாசில்தார் வரவேண்டிய காரணம் என்ன?. தபால் வாக்குகளில் முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகம் கொள்கிறோம். அந்த அறையையும் சீல் செய்திருக்க வேண்டும். இதைப்பற்றி புகார் தெரிவிக்க கலெக்டர் நீண்ட நேரம் லைனில் வரவில்லை. எனவே, வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற வேண்டுமென்றால் கலெக்டரை மாற்ற வேண்டும்’’ என்றார்.

சு.வெங்கடேசன்

இதுபற்றி அ.தி.மு.க வேட்பாளர் ராஜ் சத்யன், ``காரணமின்றி பெண் அதிகாரி மாவட்ட ஆட்சியரின் அனுமதி இன்றி உள்ளே நுழைந்தது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அவரை சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது தீவிர விசாரணை நடத்திட வேண்டும். என் சார்பில்  ஆட்சியரிடம்  தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பாக மனு அளிக்க உள்ளேன். அ.தி.மு.கவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டபிறகு  உள்நோக்கத்துடன் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதுபோல் தெரிகிறது’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை