`பேருந்துக்குள் குடைபிடித்தும் தொப்பலா நனைஞ்சிட்டோம்!’ - ஊட்டி பயணிகள் வேதனை | Government buses in Ooty are operated in poor condition, alleges passengers

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (21/04/2019)

கடைசி தொடர்பு:19:00 (21/04/2019)

`பேருந்துக்குள் குடைபிடித்தும் தொப்பலா நனைஞ்சிட்டோம்!’ - ஊட்டி பயணிகள் வேதனை

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்துகளே முதன்மையான பொது போக்குவரத்தாக உள்ளது .தமிழகத்தில் மற்ற மாவட்டங்களைப் போல இங்குத் தனியார் பேருந்துகள் கிடையாது .முழுக்க முழுக்க அரசுப் பேருந்துகளை நம்பியே பயணிகள் உள்ளனர்.

பேருந்துக்குள் குடைபிடித்தபடி பயணிக்கும் பயணிகள்

உஷாசுற்றுலாப் பயணிகள் அதிகம் வரக்கூடிய நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 360 பேருந்துகள் இயக்கப்படுகிறது. 1.920 போக்குவரத்து ஊழியர்கள் பணிபுரிகின்றனர். நீலகிரி மலைப் பாதைகளில் பராமரிப்புக் குறைவான பேருந்துகளை இயக்குவதாகப் பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் குன்னூர் பகுதியைச் சேர்ந்த உஷா என்பவர் குழந்தைகளுடன் அரசு பேருந்தில் குன்னூரில் இருந்து ஊட்டிக்குப் பயணம் செய்தார். வேலிவியூ அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென மழை பெய்யத் துவங்கியது. பேருந்தின் மேற்கூரையில் இருந்த துளை காரணமாக மழை நீர், பேருந்துக்குள் மழைபோல் பெய்யத் தொடங்கியிருக்கிறது. இதனால், அவதிக்குள்ளான சில பயணிகள் திட்டிக்கொண்டே எழுந்து நின்றுகொண்டனர்.

பேருந்தில் பயணித்த சிலர் குடைகளைப் பிடித்தனர். உஷாவும், தான் வைத்திருந்த குடையை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு இவர் நனைந்தபடியே பயணித்தார்.  மழை நீர் அதிகளவு  பேருந்துக்குள் கொட்டியதால் பேருந்தில் பயணித்த  பயணிகள் நனைந்தபடியே குளிரில் பயணித்தனர்.

 இது குறித்து பயணி உஷா கூறுகையில், ``நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை அரசுப் பேருந்துகள் முறையான பராமரிப்பு இல்லாத நிலையில் இயக்கப்படுகிறது. அரசுப் பேருந்தின் டயர், மேற்கூரை, இருக்கைகள் என அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன. இதுதொடர்பாகப் புகார் அளித்தாலும் எந்த பயனும் இல்லை. எதைக் கேட்டாலும், `போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது’ என்ற ஒற்றைப் பதிலையே சொல்கின்றனர். ஒழுகும் பேருந்துகளால் மழைக் காலங்களில் பயணிக்கவே பயமாக உள்ளது’’ என்றார்.