`தேர்வு எழுத முடியவில்லை; 10வது முறையாகக் காவல் நீட்டிப்பு!' - இலங்கைச் சிறையில் தவிக்கும் மாணவர்கள் | Relatives of the Sri Lankan prisoners were forced to release the fishermen.

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (22/04/2019)

கடைசி தொடர்பு:16:50 (22/04/2019)

`தேர்வு எழுத முடியவில்லை; 10வது முறையாகக் காவல் நீட்டிப்பு!' - இலங்கைச் சிறையில் தவிக்கும் மாணவர்கள்

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு 10-வது முறையாகக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டதால் மீனவர்களின் உறவினர்கள் திடீர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தங்கச்சிமடம் மீனவர்கள் திடீர் போராட்டம்
 

கடந்த ஜனவரி 13-ம் தேதி பாரம்பர்ய பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினர் கப்பலைக் கொண்டு மோதியதில் கருப்பையா என்பவரது படகு கடலில் மூழ்கியது. இதில் முனியசாமி என்ற மீனவர் உயிரிழந்தார். இதில் இருந்த மற்ற மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் மீட்டு இலங்கை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதேபோல் அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மேலும் ஒரு படகையும் மூழ்கடித்த இலங்கைக் கடற்படையினர் அந்தப் படகில் இருந்த மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர்.

கடற்படை விசாரணைக்குப் பின் நீதிமன்ற உத்தரவுப்படி இலங்கைச் சிறையில் மீனவர்கள் 8 பேரும் அடைக்கப்பட்டனர். இந்த மீனவர்களில் ஒருவர் ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவர். மற்றொருவர் கல்லூரி மாணவர். சாம் டேனியல், துரைப்பாண்டி ஆகிய இரு மாணவர்களும் சிறையிலிருந்து விடுவிக்கப்படாததால் இந்த ஆண்டு தேர்வை எழுத முடியாமல் போனது. இது குறித்து சமீபத்தில் நடந்த கச்சத்தீவு திருவிழாவின்போது இலங்கைக் கடற்படை அதிகாரிகள், இந்திய தூதரக அதிகாரிகளிடம் ராமேஸ்வரம் மீனவர்கள் முறையிட்டு மனு அளித்தனர். இதன் பின்னரும் இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த 13-ம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காகப் பிரதமர் மோடி ராமநாதபுரம் வந்த அன்று, இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சிமடம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, மீனவர்கள் தங்கள் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றனர்.

தங்கச்சிமடம் மீனவர்கள் திடீர் போராட்டம்

இதன் பின்னரும் இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை. இதனிடையே இன்று ஊர்காவல்துறை நீதிமன்றம், மே 6-ம் தேதி வரை மீனவர்களின் சிறைக் காவலை நீட்டித்து உத்தரவிட்டது. மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10-வது முறையாக மீனவர்களின் சிறைக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது மீனவர்களின் குடும்பத்தினரை அதிர்ச்சி அடையச் செய்தது. 
இதையடுத்து மீனவர்களை மீட்கக் கோரி, இன்று காலை மாணவர்கள் துரைப்பாண்டி, ஷாம்டேனியல் ஆகியோர் வீட்டு முன் திரண்ட அவர்களது உறவினர்கள் மற்றும் மீனவர்கள் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீஸார் மற்றும் மீனவர் சங்கத் தலைவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.