`தனிக்கட்சி தொடங்கியது ஏன்?’ - நிர்வாகிகளிடம் பகிர்ந்த தினகரன் | Dinakaran speaks about AMMK party registration

வெளியிடப்பட்ட நேரம்: 17:08 (22/04/2019)

கடைசி தொடர்பு:17:17 (22/04/2019)

`தனிக்கட்சி தொடங்கியது ஏன்?’ - நிர்வாகிகளிடம் பகிர்ந்த தினகரன்

தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை மிக முக்கியமானதாகப் பார்க்கிறோம். இதில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுவிட்டால், அ.தி.மு.க நிர்வாகிகளும் தொண்டர்களும் தினகரன் பின்னால் வந்துவிடுவார்கள்.

`தனிக்கட்சி தொடங்கியது ஏன்?’ - நிர்வாகிகளிடம் பகிர்ந்த தினகரன்

திருப்பரங்குன்றம் உட்பட 4 தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறார் அ.ம.மு.க பொதுச் செயலாளர் தினகரன். இதற்கான சுற்றுப்பயண விவரங்களையும் அறிவித்துவிட்டார். `தனிக்கட்சியைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். தொடர்ந்து போராடுவோம்' என நிர்வாகிகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் டி.டி.வி.தினகரன் 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகக் கடந்த 19-ம் தேதி தேர்வு செய்யப்பட்டார் தினகரன். இதுதொடர்பாக, சசிகலா ஒப்புதல் கடிதம் கொடுத்ததாகவும் தகவல் வெளியானது. 4 தொகுதிகளுக்கான தேர்தல் நடக்க இருக்கும் சூழலில், தினகரனின் முடிவு அ.ம.மு.க வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. "அ.தி.மு.க-வை மீட்போம்; இரட்டை இலையைக் கைப்பற்றுவோம் எனக் கூறியதால்தான் அ.ம.மு.க-வைத் தற்காலிக ஏற்பாடாகப் பார்த்தோம். இப்போது தனிக்கட்சியாகப் பதிவு செய்வதால் அந்த நோக்கத்திலிருந்து விலகுவதுபோல் ஆகிவிட்டது" எனக் கட்சி நிர்வாகிகள் சிலர் பேசத் தொடங்கினர். 

தினகரன்

`தனிக்கட்சி தொடங்கப்பட்டது ஏன்?' என முக்கிய நிர்வாகிகளிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார் தினகரன். அவர் பேசும்போது, "அ.தி.மு.க மீதான உரிமையைப் பெறுவது தொடர்பாகத் தொடர்ந்து சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டோம். எஸ்.எல்.பி (special leave petition) வரையில் சென்று முயன்றுவிட்டோம். வேறு வழியில்லை. அதனால்தான், நாம் தனிக்கட்சியைப் பதிவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து போராடுவோம். வெற்றி பெறுவோம்" எனக் கூறியிருக்கிறார். 

தினகரனின் விளக்கம் குறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க நிர்வாகி ஒருவர், "அவரது இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறோம். சிறப்பு விடுப்பு மனு (special leave petition) என்பது இந்த வழக்கை எடுத்துக் கொள்ளலாமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பது. இறுதிக்கட்ட முயற்சியாக எஸ்.எல்.பி-யைத் தாக்கல் செய்தோம். இந்த மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டனர். தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை மிக முக்கியமானதாகப் பார்க்கிறோம். இதில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுவிட்டால், அ.தி.மு.க நிர்வாகிகளும் தொண்டர்களும் தினகரன் பின்னால் வந்துவிடுவார்கள். அதைக் கணக்கில் வைத்துதான் தேர்தலில் கடுமையாக உழைத்தோம். 

சசிகலா

40 மக்களவைத் தொகுதிகளுக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கீடு செய்தனர். அடுத்து வரவிருக்கின்ற 4 தொகுதிகளுக்கான தேர்தலுக்கு இதே பரிசுப் பெட்டி சின்னத்தைக் கொடுக்க மாட்டார்கள். `தனிச் சின்னம் வேண்டும் என்றால், கட்சியைப் பதிவு செய்துவிட்டு வாங்கிக் கொள்ளுங்கள்' என உச்ச நீதிமன்றத்தின் ஆணையில் சொல்லப்பட்டிருக்கிறது. தேர்தல் நடப்பதற்கு 30 நாள்களுக்கு முன்னதாகக் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதால்தான் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார் தினகரன். இதுதான் உண்மை நிலவரம். நீதியின் போராட்டத்தில் தொடர்ந்து பயணித்தாலும் இந்தக் கட்சியைத் தொடங்குவது தவிர்க்க முடியாத ஒன்று. தினகரன் கூறிய விளக்கத்தை கட்சி நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டனர்" என்றவர், 

தினகரன்

"இப்போது எங்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல், சிவில் சூட் அப்பீல் (CSA) வழக்குதான். வானகரத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச் செயலாளராகத் தேர்வு செய்தது குறித்த வழக்கு (CSA 857/2017) உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கை நீதிபதி கார்த்திகேயன் தள்ளுபடி செய்துவிட்டார். இதன் மேல்முறையீடு நடந்துகொண்டிருக்கிறது. இந்த வழக்கை இனி தொடர்ந்து நடத்த இருக்கிறார் சசிகலா" என்றார் நிதானமாக.