சூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை! | nomination filed for sulur by election

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (22/04/2019)

கடைசி தொடர்பு:19:50 (22/04/2019)

சூலூர் இடைத்தேர்தல் - கோமாளி வேடத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேச்சை!

சூலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் கோமாளி வேடம் அணிந்து வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

நூர் முகமது

சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று சூலூரில் இரண்டு சுயேச்சைகள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் கதிரேசன் மற்றும் தேர்தல் மன்னன் என்றழைக்கப்படும் நூர் முகமது ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

கதிரேசன் திருப்பூர் மேயர் பதவி, 2014 பொள்ளாச்சி நாடாளுமன்றத் தேர்தல், 2015 ஶ்ரீரங்கம் இடைத்தேர்தல், 2017 ஆர்.கே.நகர், நடப்பு நாடாளுமன்றத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டிருக்கிறார். அதேபோல, நூர் முகமது தமிழகத்தில் திருமங்கலம், ஆர்.கே.நகர் உள்ளிட்ட இடைத்தேர்தல்கள், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். நடப்பு நாடாளுமன்றத் தேர்தலில் கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், இரண்டு தொகுதிகளிலும் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது.

எப்போதும் நூதன முறையில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நூர் முகமது, இன்று கோமாளி வேடம் அணிந்து வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார். சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பிருந்து, தேர்தல் நடத்தும் அலுவலரின் அறை வரை நடனம் ஆடிக்கொண்டே வந்தார். முதலில் வேட்பு மனுவை வாங்கிச் சென்றவர், சிறிது நேரத்திலேயே வந்து வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

ஆனால், விண்ணப்பத்தை அவர் சரியாக பூர்த்தி செய்யவில்லை. இதனால், அதிகாரிகள் அவரை அடிக்கடி அழைத்து தகவல் கேட்டனர். ஒரு வழியாக 2 மணி நேரம் கழித்து நூர் முகமது உறுதி மொழி வாசித்தார். அப்படியும், அவர் தனது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யவில்லை. முதல் நாள் வேட்பு மனுத்  தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், சொத்து விவரங்களைத் தயார் செய்யவில்லை. அதை அடுத்த இரண்டு நாள்களுக்குள் கொடுத்துவிடுவேன் என்றார் நூர் முகமது.

நூர் முகமது

பிறகு, படிக்கட்டில் தத்தளித்தவாரே கீழே இறங்கிய நூர் முகமது செய்தியாளர்களிடம், ``இது நான் சந்திக்கும் 31-வது தேர்தல். மக்களுக்கு ஏதாவது வகையில் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன். ரூ.250 என்ற தொகையில் இருந்து நான் வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகிறேன். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்துவிட்டால், நான் பிறகு தேர்தலில் போட்டியிடவே  மாட்டேன்" என்றார்.

பிறகு மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து, நடனம் ஆடிக்கொண்டே, முகமுடியை கூட கழட்டாமல் மக்களிடம் வாக்கும் சேகரித்தார்  நூர் முகமது.