`நள்ளிரவு காரில் வந்த கும்பல்' - நெல்லையில் அதிகரிக்கும் முகமூடிக் கொள்ளையர்களின் தொல்லை! | people are afraid of thieves in nellai district

வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (22/04/2019)

கடைசி தொடர்பு:21:45 (22/04/2019)

`நள்ளிரவு காரில் வந்த கும்பல்' - நெல்லையில் அதிகரிக்கும் முகமூடிக் கொள்ளையர்களின் தொல்லை!

நெல்லை மாவட்டத்தில், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களைக் காட்டி மிரட்டி நகை மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். 

முகமூடிக் கொள்ளையர் நுழைந்த வீடு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மலையடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், பாலசந்திரன். இவர் சென்னையில் குடிநீர் வடிகால் வாரியத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். அவரின் மனைவி பரிபூரணம் மலையடிப்பட்டி பகுதியில் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். 

பரிபூரணம் அவரின் மகன் பிரவீன் ஆகிய இருவர் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். அவர்களது வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு ஒரு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்தபடியே அவரது வீட்டிற்குள் சுவர் ஏறிக் குதித்துள்ளது. 

வீட்டின் உள்ளே சத்தம் கேட்டதால் பரிபூரணம் முகப்புக் கதவைத் திறந்துள்ளார். அப்போது கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த அந்தக் கும்பல், பரிபூரணத்தையும் அவரின் மகன் பிரவீனையும் பயங்கர ஆயுதங்களைக் காட்டி மிரட்டியதுடன் வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகை, 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், விலை உயர்ந்த செல்போன், கேமரா ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். 

கொள்ளை போன வீடு

 வீட்டில் இருந்த லேப்டாப்பை அறிவாளால் வெட்டிச் சேதப்படுத்தியிருக்கிறார்கள். பொருள்களை எல்லாம் கொள்ளையடித்த அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. பாதிக்கப்பட்ட பரிபூரணம் மற்றும் பிரவீன் ஆகியோர் கரிவலம் வந்தநல்லூர் காவல்நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். 

உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிந்திருந்த தடயங்களைச் சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தொடர்ந்து கொள்ளையர்களைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

ஏற்கெனவே, சங்கரன்கோவில் பகுதியில் இரண்டு பேர் கொண்ட முகமூடிக் கொள்ளையர்கள், அங்குள்ள வீட்டின் உள்ளே நுழைந்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நடந்த இரு தினங்களில் மீண்டும் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அடுத்தடுத்து நடக்கும் கொள்ளைச் சம்பவங்கள், அப்பகுதி மக்களை அச்சமடைய வைத்துள்ளது.