`வாக்காளர்களை நீக்கிய அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - மீனவர் அமைப்பு புகார்! | action should be taken the officials who remove voters from vote list

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (23/04/2019)

கடைசி தொடர்பு:07:29 (23/04/2019)

`வாக்காளர்களை நீக்கிய அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - மீனவர் அமைப்பு புகார்!

'நாடாளுமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் வாக்காளர்களை நீக்கிய அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பினர் புகார் அளித்தனர்.

புகார்மனு

தமிழகம் முழுவதும் கடந்த 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் 1694 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், கடலோரக் கிராமங்களில் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாகக்கூறி, தேர்தல் நாள் அன்று மீனவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம்செய்தனர். இந்த நிலையில், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் ஒரு லட்சம் பேர் வாக்குரிமையை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, மீனவ கிராமங்களில் சுமார் 40,000-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில் மற்றும் மக்கள் பாதை அமைப்பினர், நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர்.

சர்ச்சில்

பின்னர் சர்ச்சில் கூறுகையில், ``கடலில் மீன்பிடிக்கச் சென்று ஓகி புயலில் சிக்கி இறந்த மீனவர்களை மீட்கக்கோரி போராட்டம் நடத்திய பகுதியில் அதிகமான வாக்குகள் காணாமல் போயுள்ளது. மீனவ மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து காணாமல்போனது குறித்து விசாரணை நடத்த வேண்டும். மீனவர்களின் வாக்குரிமையை மீட்டுத்தர வேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.