`பெரிய நெட்வொர்க் எல்லாம் இல்லீங்க, வெறும் கை செலவுக்குத்தான்!’ - சந்தனமரம் கடத்தியவர்களை வளைத்த பொதுமக்கள் | public caught the sandal wood cutters

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (23/04/2019)

கடைசி தொடர்பு:08:00 (23/04/2019)

`பெரிய நெட்வொர்க் எல்லாம் இல்லீங்க, வெறும் கை செலவுக்குத்தான்!’ - சந்தனமரம் கடத்தியவர்களை வளைத்த பொதுமக்கள்

சந்தனமரம்

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியை அடுத்த ரங்கன் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் அதே பகுதியில் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். பறவைகளின் எச்சத்தால் அவருடைய நிலத்தில் எப்படியோ ஐந்து சந்தன மரங்கள் வளர்ந்திருக்கின்றன. ஆரம்பத்தில் அது சந்தன மரம்தான் எனத் தெரியாமலிருந்தவர், விஷயம் தெரிந்த பின்னர் கொஞ்சம் உஷாராகியிருக்கிறார். அந்த ஐந்து சந்தன மரங்களையும் வேலி போட்டு பத்திரமாக வளர்த்து வந்திருக்கிறார்.

இதற்கிடையே கடந்த 21-ம் தேதியன்று இரவு அருண்குமார் தோட்டத்திற்குள் புகுந்த கும்பல் ஒன்று, விடாத மழையிலும் சத்தமில்லாமல் சந்தன மரங்களை அறுக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஒரு மரத்தை வெட்டி முடிப்பதற்குள்ளாகவே, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இதைப் பார்த்து கூச்சலிட்டிருக்கின்றனர். உடனே, அந்தப் பகுதியிலுள்ள பொதுமக்கள் ஒன்றுகூடி சந்தனமரம் வெட்டிய கும்பலை வளைக்க முயன்றிருக்கின்றனர். அதில் ஒருவன் மட்டுமே சிக்க, மீதமிருந்த இருவர் தப்பித்திருக்கின்றனர். சிக்கிய 24 வயதான கார்த்திக் என்ற இளைஞனை நையப் புடைத்த பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்திருக்கின்றனர். மேலும், தப்பியோடிய 23 வயதான கதிர்வேல் என்ற இளைஞரையும் போலீஸார் பிடித்திருக்கின்றனர். இதில் முருகேசன் என்ற ஒருவர் மட்டும் தலைமறைவாகியிருக்கிறார். சம்பந்தப்பட்ட இந்த மூன்று பேரும் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. பிடிபட்டவர்களிடமிருந்து சுமார் 8 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு பெரிய சந்தனக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சந்தன மரம்

பிடிபட்ட குற்றவாளிகள், ``நீங்க நினைக்குற அளவுக்கு நாங்க பெரிய நெட்வொர்க் எல்லாம் இல்லைங்க சார். இதைக் கொண்டு போய் வித்தா சில ஆயிரங்கள் கிடைக்கும். சும்மா கை செலவுக்காகத்தான் வெட்டுனோம். எங்களை மன்னிச்சு விட்டுடுங்க சார்” என போலீஸாரிடம் கதறியிருக்கிறார்கள்.

அதனையடுத்து குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், கோபிசெட்டிபாளையம் கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய குற்றவாளியைத் தேடியும், இவர்களுக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் மற்றும் அந்தியூர் ஆகிய பகுதிகளில் காடுகளிலிருந்து சந்தன மரங்களை வெட்டிக் கடத்தி வருவதாகச் சொல்லப்பட்டு வரும் நிலையில், இந்தக் குற்றவாளிகளிடம் சரியான விதத்தில் விசாரித்தால், இந்த விவகாரத்தில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், இதை எங்கு கொண்டு போய் விற்கிறார்கள் என்றெல்லாம் தெரியவரும் என்கிறார்கள் பொதுமக்கள்.