சொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற அண்ணன்! | Thoothukudi brother murder

வெளியிடப்பட்ட நேரம்: 08:56 (23/04/2019)

கடைசி தொடர்பு:08:56 (23/04/2019)

சொத்து தகராறு - தூத்துக்குடியில் துப்பாக்கியால் தம்பியைச் சுட்டுக் கொன்ற அண்ணன்!

தூத்துக்குடியில் சொத்து தகராறில் சொந்த தம்பியையே அண்ணன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி சின்னக்கடை தெருவைச் சேர்ந்தவர் பில்லா ஜெகன். தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவராகவும், தி.மு.க., தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராகவும் உள்ளார். இவர், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரும் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர். இவருக்கு ரவி, சுமன், சிமன்சன் என மூன்று தம்பிகள் உள்ளனர். லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார்.

பில்லாஜெகனுக்கும், அவரது மூன்றாவது தம்பி சிமன்சன் என்பவருக்கும் இடையே வீட்டுச் சொத்தை பிரித்துக் கொள்வது சம்பந்தமாக கடந்த சில மாதங்களாகப் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இருவருக்கும் இடையே மீண்டும் சொத்துப் பிரச்னையில் வாய்த்தகறாறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பில்லா ஜெகன், தம்பி என்றும் பாராமல் சிமன்சனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடி விட்டாராம்.

இதில் சிமன்சனின் தொடைப் பகுதியில் குண்டு பாய்ந்து ரத்தம் பீறிட்டு ஓடியது. சிறிது நேரத்திலேயே சிம்சன் அதிக ரத்தப் போக்கின் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்தார்‌. இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பில்லா ஜெகனை தேடி வருகின்றனர்.

கடந்த 2017-ம் ஆண்டு தனது மகளை காதலித்த ஒருவரை துன்புறுத்தி, அரிவாளால் உடல் முழுவதும் கீறி  நிர்வாணமாக காட்டுப்பகுதியில் வீசிய வழக்கில் பில்லா ஜெகனுடன், தற்போது துப்பாக்கிச்சூட்டில்  உயிரிழந்த அவரது தம்பி சிமன்சனும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். ஜெகன் மீது,  தூத்துக்குடி வடபாகம், தென்பாகம் போலீஸ் நிலையங்களில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நன்னடத்தை விதி அமல்படுத்தப்பட்ட உடன், உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போர், காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தூத்துக்குடியில் மக்களவைத் தேர்தலும், விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. அடுத்த மாதம் (மே) 19-ம் தேதி ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்த நிலையில் துப்பாக்கியைப் பயன்படுத்தி சொத்து தகராறில் தம்பியை, அண்ணனே சுட்டு கொலை செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் காவல்துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க