``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..?” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குப்பதிவு | Voting stopped in one booth in kerala

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (23/04/2019)

கடைசி தொடர்பு:10:17 (23/04/2019)

``கை சின்னத்துக்கு வாக்களித்தேன்... ஆனால்..?” - கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்குப்பதிவு

கை சின்னத்திற்கு வாக்களித்தபோது தாமரை சின்னத்திற்கு அருகில் உள்ள லைட் ஒளிர்ந்ததை அடுத்து, கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதிக்குட்பட்ட கோவளம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்துவருகிறது. முதல்கட்ட தேர்தல், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி 91 தொகுதிகளுக்கு நடந்தது. இரண்டாம் கட்டமாக, கடந்த 18 -ம் தேதி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 97 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தது. இன்று மூன்றாம் கட்டமாக உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரா, கேரளம், கர்நாடகம், கோவா, ஒடிசா, சத்தீஸ்கர், அஸ்ஸாம், திரிபுரா உள்பட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நடந்துவருகிறது.

வாக்குசாவடி

இதன் அடிப்படையில், கேரள மாநிலத்தின் 20 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. கேரள தலைநகர் திருவனந்தபுரம் தொகுதிக்குட்பட்ட கோவளம் செவ்வர வாக்குச்சாவடியில், 151-வது பூத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. முதலில் சுமார் 76 பேர் ஓட்டு போட்டனர். 77-வது நபர் கை-க்கு வாக்களித்தபோது தாமரை சின்னத்திற்கு அருகில் உள்ள லைட் ஒளிர்ந்ததாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து 151-வது பூத்தில் மட்டும் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.