`எந்த நேரத்தில் என்ன ஆகுமோன்னு பயந்துக்கிட்டு இருக்கேன்!'- எம்.எல்.ஏ மீது 90 வயது மூதாட்டி புகார் | 90 years old lady complaint against her son and mla thoppu venkatachalam

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (23/04/2019)

கடைசி தொடர்பு:11:30 (23/04/2019)

`எந்த நேரத்தில் என்ன ஆகுமோன்னு பயந்துக்கிட்டு இருக்கேன்!'- எம்.எல்.ஏ மீது 90 வயது மூதாட்டி புகார்

மூதாட்டி புகார்

சொத்தை அபகரிப்பதற்காக பெற்ற மகனே, போலீஸார் மற்றும் அரசியல்வாதிகளுடன் சேர்ந்துகொண்டு மிரட்டுவதாக 90 வயது பாட்டி ஒருவர் ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் கண்ணீரோடு புகார் அளிக்க வந்த சம்பவம் பார்ப்போர் நெஞ்சைப் பதைபதைக்க வைத்தது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா கோபி கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பெரியண்ணகவுண்டர் – தங்கம்மாள் தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் இருக்கின்றனர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்களுக்கு மொத்தம் 20 ஏக்கர் விவசாய நிலம் இருந்திருக்கிறது. ஒரே மகனான விஜயபுரி கொடுத்து வந்த தொந்தரவால் 20 ஏக்கர் நிலத்தை தன்னுடைய மகனுக்கும், மூன்று மகள்களுக்கும் பெரியண்ணகவுண்டர் பிரச்னையில்லாமல், சரிசமமாகப் பிரித்துக் கொடுத்திருத்திருக்கிறார். தனக்கென மீதமிருந்த ஒரு வீட்டில் வசித்துவந்த பெரியண்ணகவுண்டர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறையால் இறந்து போயிருக்கிறார். அதனையடுத்து, அவருடைய மனைவியான 90 வயதான தங்கம்மாள்தான் அந்த வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இதற்கிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு, போலீஸார் மற்றும் பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் உதவியுடன் தங்கம்மாளை, அவரது மகனே வீட்டை விட்டு வெளியேற்றி நடுத்தெருவில் நிர்கதியாய் நிற்க வைத்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், வீட்டை அவருடைய பெயரில் எழுதிக்கொடுக்க வேண்டுமென்று, எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் ஆட்களை வைத்து அவரது மகனான விஜயபுரி மிரட்டியிருக்கிறார். இதனால் பயந்துபோன தங்கம்மாள், தன்னுடைய மகன் மற்றும் அவருக்கு ஆதரவாகச் செயல்படும் எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈரோடு எஸ்.பியிடம் புகாரளிக்க கண்ணீரோடு வந்தார்.

மகன் மீது புகார் கொடுத்த 90 வயது மூதாட்டி

தங்கம்மாளிடம் பேசுகையில், ``என் வீட்டுக்காரர் உடம்பு முடியாம படுத்துக் கிடந்தப்ப கூட, என் மகன் வந்து பார்க்கலை. அவர் இறந்தப்பவும் காரியம் செய்யக்கூட வரலை. ஆனா, இப்போ என்னை வீட்டை விட்டு விரட்டிட்டு, அந்த வீட்டை என் பேருக்கு எழுதிக் கொடுன்னு சொல்லி போலீஸை வச்சும், எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலத்தை வச்சும் மிரட்டுரான். இதுசம்பந்தமாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனத்திடம் புகார் கொடுத்தபோது, `எம்.எல்.ஏவை மீறி நான் எதுவும் செய்ய முடியாது. தேவையில்லாம ஏதாவது சத்தம் போட்டா, பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவேன்’னு மிரட்டி, எம்.எல்.ஏ ஆட்களோட வந்து என் வீட்டை பூட்டி என்னை வெளிய தள்ளிட்டார்

வீடு மட்டுமல்லாம, என்னோட மூணு மகளுங்களுக்குப் பிரித்துக்கொடுத்த சொத்துகளையும் தன்னுடைய பெயருக்கே எழுதிக் கொடுக்க வேண்டுமென்று, அரசியல் பிரமுகர்களுடன் சேர்ந்துகொண்டு என்னுடைய மகனே எங்களை மிரட்டுகிறான். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்காக எங்களை மிரட்டி வருகின்றனர். எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என பயந்துகொண்டிருக்கிறேன். எனவே என்னுடைய மகன் விஜயபுரி, பெருந்துறை எம்.எல்.ஏ, பெருந்துறை அ.தி.மு.க ஒன்றியச் செயலாளார் விஜயன் என்கிற இராமசாமி மற்றும் பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் ஆகியோரிடமிருந்து எங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கண்கலங்கினார்.

மகனால் என்னுடைய உயிருக்கு ஆபத்து என 90 வயதான தாயை போலீஸ் படியேற வைத்த மகனை என்னவென்று சொல்வது…