`நான் வாக்களித்த பூத்தில் இயந்திரம் கோளாறு!'- தேர்தல் கமிஷன் மீது பாய்ந்த பினராயி விஜயன் | Kerala CM slams EC for problem in voting machine

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (23/04/2019)

கடைசி தொடர்பு:12:00 (23/04/2019)

`நான் வாக்களித்த பூத்தில் இயந்திரம் கோளாறு!'- தேர்தல் கமிஷன் மீது பாய்ந்த பினராயி விஜயன்

``நான் வாக்களித்த பூத்திலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்படும் கோளாறு விஷயத்தை தேர்தல் கமிஷன் சீரியசாக எடுத்திருக்க வேண்டும்'' எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

குடும்பத்தினருடன் வாக்களிக்க வரும் பினராயி விஜயன்


நாடு முழுவதும் மூன்றாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. கேரள மாநிலத்தில் உள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. திருவனந்தபுரம் தொகுதியில் கோவளம் பகுதியில் கை சின்னத்திற்கு வாக்களித்தால் தாமரை சின்னத்திற்கு நேரே உள்ள விளக்கு எரிந்த சம்பவத்தால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் வேறு மிஷின் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது சொந்த ஊரான கண்ணூரில் குடும்பத்தினருடன் வாக்களிக்கச் சென்றார். முதல்வர் வாக்களிக்கச் சென்ற பூத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. பின்னர் சரி செய்யப்பட்டது.

வாக்குப்பதிவு

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``நான் வாக்களிக்கச் சென்ற பூத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அருகில் உள்ள பூத்திலும், பக்கத்து பஞ்சாயத்தில் உள்ள வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் தகராறு இருப்பதாக ஏற்கெனவே பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தகராறு செய்யும் விஷயத்தை தேர்தல் கமிஷன் சீரியசாக எடுத்திருக்க வேண்டும்" என்றார்.