`ஓட்டுக்கு ஏன் பணம் கொடுத்தீங்க!'- வாக்குச்சாவடியில் சித்தப்பாவைப் பதறவைத்த மகன் | why did u gave money for vote

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (23/04/2019)

கடைசி தொடர்பு:12:15 (23/04/2019)

`ஓட்டுக்கு ஏன் பணம் கொடுத்தீங்க!'- வாக்குச்சாவடியில் சித்தப்பாவைப் பதறவைத்த மகன்

நாடாளுமன்றத் தேர்தலின்போது ஓட்டுக்குப் பணம் கொடுத்த சித்தப்பாவை மகன் கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாராபுரம் பகுதியில் அமைந்துள்ளது தேர்ப்பட்டி. இங்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடந்த அன்று அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு அ.தி.மு.கவினர் பணம் கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் அப்பகுதி அ.தி.மு.க ஒன்றிய துணைச் செயலாளர் நாட்டுதுரை என்பவருக்கும், தி.மு.க ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் ஆதித்யா என்பவருக்கும் இடையே கைகலப்பு உருவானது. அப்போது இளைஞர் ஆதித்யா, `ஓட்டுக்கு ஏன் பணம் கொடுத்தீங்க' என்று ஆவேசத்துடன் நாட்டுதுரையின் கன்னத்தில் பளார் விட்டிருக்கிறார். இதனால் பதறிப்போன நாட்டுதுரை பின் தானும் எதிர்த்துத் தாக்குவதற்கு முயற்சி செய்ய, உடனே அங்கு கூடியிருந்தவர்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ஓட்டுக்கு பணம் கொடுத்த நாட்டுதுரை

இதனையடுத்து நாட்டுதுரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். பின்னர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க அப்பகுதி காவல்துறையினர் சென்றபோது, ``இளைஞர் ஆதித்யாவின் சித்தப்பாதான் நாட்டுதுரை என்பது தெரிந்திருக்கிறது. அத்துடன் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பதால் சம்பவம் தொடர்பாக காவல்துறையில் வழக்கு எதுவும் பதிந்திட வேண்டாம் என இருதரப்பும் சமாதானமாகியுள்ளனர். இதனிடையே தி.மு.கவைச் சேர்ந்த இளைஞர் ஆதித்யா, அ.தி.மு.கவைச் சேர்ந்த தன் சித்தப்பா நாட்டுதுரையின் கன்னத்தில் ஆவேசமாக அறைந்த வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.