`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்!'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ் | Police arrested the man behind the whatsapp video, that lead to riot

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (23/04/2019)

கடைசி தொடர்பு:14:10 (23/04/2019)

`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்!'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்

ஒரு சமூகத்தினரை, மற்றொரு சமூகத்தினர் தவறாகச் சித்திரித்து வாட்ஸ் அப்பில் அவதூறு வீடியோ வெளியிட்ட சம்பவத்தில் வதந்தி பரப்பியதாக ஒருவரை போலீஸார் கைதுசெய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

வதந்தி பரப்பியவர் கைது

ஒரு சமூகத்தினரை, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருவர் தவறாக சித்திரித்துப் பேசும் வகையிலான வீடியோ ஒன்று சில தினங்களுக்கு முன்பு  வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, தங்களது சமூகத்துப் பெண்களை இழிவுப்படுத்திப் பேசியதால், கொதிப்படைந்த அந்தச் சமூகத்தினர், பொன்னமராவதியில் காவல் நிலையம் முற்றுகை, சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஏப்ரல் 19-ம் தேதி, காவல் நிலையத்திற்குள் கல் வீசித் தாக்குதல், கடைகள் அடைப்பு, போக்குவரத்து நிறுத்தம் என பொன்னமராவதியே ஸ்தம்பித்தது. சட்டம்- ஒழுங்கு பிரச்னையைக் கருத்தில்கொண்டு, பொன்னமராவதி தாலுகாவில் உள்ள 49 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேபோல, இரண்டு நாள் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. வாட்ஸ் அப்பில் அவதூறு வீடியோ வெளியிட்டவர்களைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

சாலையில் போடப்பட்ட மரங்கள்

இந்த நிலையில், 'இவர்தான் அவதூறு வீடியோ வெளியிட்டவர். இவர் கைதுசெய்யப்படும் வரையிலும் அனைத்து குரூப்பிலும் பகிருங்கள்' என்று அவரின் புகைப்படத்துடன் குறுந்தகவல் ஒன்றும் வாட்ஸ் அப்பில் வலம்வந்தது. இந்தத் தகவல் தீவிரமாகப் பரவவே, திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த அய்யாச்சாமி என்பவர், திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், `என் படத்துடன் தவறான தகவலை வாட்ஸ் அப்பில் பரப்பிவருகின்றனர். எனக்கும் அந்த வீடியோவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்மீது வீணாக வதந்தி பரப்புபவர்கள்மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். அதில், சிலரின் ஊர் மற்றும் பெயர்களைத் தெரிவித்தனர். அந்தப் புகாரின் பேரில், போலீஸார் பலரிடம் விசாரணை நடத்தி, கொத்தமங்கலத்தைச் சேர்ந்த குகனை திருச்சிற்றம்பலம் போலீஸார் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், வாட்ஸ் அப்பில் வீண் வதந்திகளைப் பரப்பி வழக்கைத் திசைதிருப்ப முயன்றதாகக் கூறி, குகனைக் கைதுசெய்து தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது,  'குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க கலிபோர்னியாவில் உள்ள வாட்ஸ் அப் மையத்தை அணுகி உள்ளோம். அதேநேரம், தனிப்படை விசாரணை நடைபெற்றுவருகிறது. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சமூகத்தினரே அந்த வீடியோவை வெளியிட்டதாகக் கூறி, வாட்ஸ் அப்பில் தகவல் வெளியிடுகின்றனர். வதந்திகளைப் பரப்புகின்றனர். வதந்திகளைப் பரப்புபவர்களைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறோம். தொடர்ந்து, வீடியோவில் பேசியவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது'' என்று கூறினர்.