வாரணாசிக்கு ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணம்!- என்ன காரணம்? | OPS traveled to Varanasi

வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (23/04/2019)

கடைசி தொடர்பு:16:41 (23/04/2019)

வாரணாசிக்கு ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணம்!- என்ன காரணம்?

தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் விமானம் மூலம் வாரணாசி சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓ பன்னீர் செல்வம்

ஏன் இந்த திடீர் வாரணாசிப் பயணம் என அவரது நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது, ``தன் மகன் ரவீந்திரநாத்குமார் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தப்பட்டதால், அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பிரதமர் மோடியை தேனி வரவழைத்தார் ஓ.பன்னீர்செல்வம். அதேபோல தற்போது மோடி, உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். வரும் 26-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்கிறார் மோடி. முன்னதாக தொகுதிக்குள் ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அந்நிகழ்வுக்கான வேலைகளில் தீவிரம் காட்டிவருகிறது பா.ஜ.க மேலிடம். அதன் ஒருபகுதியாக, இந்தியா முழுவதிலும் உள்ள தனது கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளை அழைத்து, வேட்புமனுத் தாக்கல் தொடர்ந்து பிரசாரம் செய்தல் போன்றவைகளைத் திட்டமிட இருக்கிறது. இதற்காகவே ஓ.பன்னீர்செல்வம் வாரணாசி சென்றிருக்கிறார். முன்னேற்பாடுகளில் கலந்துகொள்ளும் ஓ.பி.எஸ்., அந்த ஊர்வலத்தில் கலந்துகொள்வாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. அதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்றனர். ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலெட்சுமியோடு வாரணாசி சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.