வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாம்பு!- அலறியடித்து ஓடிய வாக்காளர்கள், அதிகாரிகள் | a snake came out from a VVPad machine in a pooling station in kerala

வெளியிடப்பட்ட நேரம்: 18:21 (23/04/2019)

கடைசி தொடர்பு:18:28 (23/04/2019)

வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாம்பு!- அலறியடித்து ஓடிய வாக்காளர்கள், அதிகாரிகள்

கேரள மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது, வாக்குச்சாவடியில் ஒப்புகைச் சீட்டுக்காக வைக்கப்பட்டிருந்த இயந்திரத்தில் இருந்து பாம்பு ஒன்று வெளியே வந்ததால் வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். 

வாக்குப்பதிவு மையம்

நாடு முழுவதும் நடைபெற்றுவரும் நாடாளுமன்றத் தேர்தலில் இன்று மூன்றாவது கட்டமாக வாக்குகள் பதிவாகி வருகின்றன. கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். 

கண்ணூர் மாவட்டத்தில் உள்ள மயில் கண்டக்கை என்ற இடத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஏராளமான வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அந்த வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு செய்த வாக்காளர் ஒருவர், ஒப்புகைச் சீட்டுக்கான  ’விவிபேட்’ இயந்திரத்தில் இருந்து சத்தம் வந்ததைக் கேட்டுள்ளார். அத்துடன், அதில் இருந்து குட்டிப் பாம்பு ஒன்று நெளிந்தபடியே வெளியே தலைகாட்டியிருக்கிறது. 

பாம்பு

அதனால் அதிர்ச்சி அடைந்த வாக்காளர், அங்கிருந்து ஓட்டம் பிடித்து வெளியேறினார். எந்திரத்தில் பாம்பு இருப்பது பற்றிய தகவல் அறிந்ததும் வாக்குச் சாவடியில் இருந்த அதிகாரிகளும் முகவர்களும் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். பின்னர், பாதுகாப்புக்காக நின்ற போலீஸார் அங்கு சென்று அந்தப் பாம்பை ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தின் உள்ளிருந்து வெளியேற்றினார்கள். பின்னர் லாகவமாக பாம்பைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் பாம்பைக் கொண்டு சென்று காட்டுப் பகுதிக்குள் விட்டுத் திரும்பினார்கள்.