`பொதுச் செயலாளர் ஏன்... அ.தி.மு.க. வழக்கின் அடுத்தகட்டம்!' - சசிகலாவிடம் தினகரன் பேசியது என்ன?  | What did Dinakaran discuss with Sasikala?

வெளியிடப்பட்ட நேரம்: 18:23 (23/04/2019)

கடைசி தொடர்பு:18:26 (23/04/2019)

`பொதுச் செயலாளர் ஏன்... அ.தி.மு.க. வழக்கின் அடுத்தகட்டம்!' - சசிகலாவிடம் தினகரன் பேசியது என்ன? 

அ.ம.மு.க.-வைக் கட்சியாகப் பதிவு செய்ய மனு அளித்தது குறித்தும் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக டிவிசன் பென்ஞ்சில் தொடரப்பட்ட வழக்கு குறித்தும் சசிகலாவுக்கு விளக்கிக் கூறினார் தினகரன்.

`பொதுச் செயலாளர் ஏன்... அ.தி.மு.க. வழக்கின் அடுத்தகட்டம்!' - சசிகலாவிடம் தினகரன் பேசியது என்ன? 

அ.ம.மு.க பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு சசிகலாவை இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார் டி.டி.வி.தினகரன். ``அ.தி.மு.க பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட வழக்கை சட்டரீதியாக நடத்துவது குறித்தும் தேர்தல் வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது" என்கின்றனர் அ.ம.மு.க வட்டாரத்தில். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மறுநாள், சென்னை அசோக் நகரில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகத்தில் அவசரக் கூட்டம் நடத்தினார் தினகரன். இந்தக் கூட்டத்தில் அ.ம.மு.க-வைக் கட்சியாகப் பதிவு செய்வது குறித்து முடிவெடுக்கப்பட்டது. கூடவே, பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார் டி.டி.வி. இந்தத் தகவல் சசிகலா தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்தது. `பொதுச் செயலாளர் தினகரன் என்றால் சசிகலாவுக்கு என்ன பதவி?' என்ற கேள்வியும் எழுந்தது. இதற்குப் பதில் அளித்த தினகரன் தரப்பினர், `அ.தி.மு.க-வை உரிமை கோரும் வழக்கை சசிகலா நடத்துவார்' எனத் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க-வைக் கட்சியாகப் பதிவு செய்யும் மனுவை முறைப்படி அளித்தனர் தினகரனின் வழக்கறிஞர்கள். இந்தத் `திடீர்' முடிவின் மூலம், `சசிகலாவை ஓரம்கட்டுகிறார் தினகரன்' என்ற ரீதியில் தகவல்கள் வெளியாயின. இன்று நடந்த சிறை சந்திப்புக்குப் பிறகு பேட்டியளித்த தினகரன், `சசிகலாவை ஓரம்கட்டவில்லை. அவருடைய ஒப்புதலின் பேரிலேயே அனைத்தும் நடக்கிறது' என விளக்கம் அளித்தார். 

தினகரன்

`சிறை சந்திப்பில் என்ன பேசப்பட்டது?' என அ.ம.மு.க நிர்வாகிகளிடம் கேட்டோம். ``இன்று நடந்த சந்திப்பின்போது தினகரன், விவேக் ஜெயராமன், அவரின் மனைவி கீர்த்தனா, அ.ம.மு.க நிர்வாகிகள் எனப் பலரும் சென்றிருந்தனர். சுமார் 45 நிமிடம் நீடித்த இந்தச் சந்திப்பில் அரசியல் ரீதியாக தினகரனும் சசிகலாவும் பேசிக் கொண்டிருந்தனர். அ.ம.மு.க-வைக் கட்சியாகப் பதிவு செய்ய மனு அளித்தது குறித்தும் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக டிவிசன் பென்ஞ்சில் தொடரப்பட்ட வழக்கு குறித்தும் சசிகலாவுக்கு விளக்கிக் கூறினார் தினகரன். அ.ம.மு.க பொதுச் செயலாளராக தினகரன் பதவியேற்றதற்கு சசிகலா எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை. அவருடைய முயற்சிகளுக்கு இசைவு தெரிவித்துவிட்டார். 

சசிகலா

இந்தச் சந்திப்பில் பேசிய தினகரன், ``நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளில் நமக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் நமக்கும் தி.மு.க-வுக்கும் இடையில்தான் போட்டி. அ.தி.மு.க வெல்வதற்கான வாய்ப்புகள் இல்லை. சட்டமன்றத் தேர்தலில் 8 தொகுதிகளில் நமக்கான வாய்ப்புகள் இருக்கின்றன" எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து, அ.தி.மு.க பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் அடுத்தகட்ட செயல்பாடுகளுக்காக சில பேப்பர்களில் சசிகலாவிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. தொடர்ந்து, தேர்தல் செலவுக் கணக்கு விவரங்களைக் காட்டியுள்ளனர். அனைத்தையும் பார்த்துவிட்டு சில ஆலோசனைகளைத் தெரிவித்தார் சசிகலா. இன்றைய சந்திப்பு நல்லபடியாகவே முடிந்தது" என்றார் நிதானமாக. 

சசிகலா

``வானகரத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளால் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. இது ஒன்றுதான் அவர் கையில் இருக்கும் துருப்புச் சீட்டு. இந்த வழக்கில் சட்டரீதியாக வென்றுவிட்டால், அ.தி.மு.க. மீதான உரிமையைக் கோருவதற்கு வசதியாக இருக்கும் என நினைக்கிறார் சசிகலா. அதற்கான சட்டப் போராட்டத்தைத் துரிதப்படுத்தும் வேலைகளில் தினகரன் தரப்பு இறங்கியிருக்கிறது. நாடாளுமன்றம் ப்ளஸ் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே, அடுத்தகட்ட ஆட்டத்தைத் தொடங்க இருக்கிறார் தினகரன்" என்கின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள் சிலர்.