`போலீஸார் துன்புறுத்துகின்றனர்!' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள் | Prisoners of Madurai central prison staged protest against officials

வெளியிடப்பட்ட நேரம்: 19:24 (23/04/2019)

கடைசி தொடர்பு:19:24 (23/04/2019)

`போலீஸார் துன்புறுத்துகின்றனர்!' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்

மதுரை மத்திய சிறையில் போலீஸார் துன்புறுத்துவதாக புகார் எழுப்பி கைதிகள் கற்களை எறிந்தும், சிறை வளாகச் சுவரில் ஏறியும் போராட்டம் நடத்தியதால் மதுரையில் 2 மணி நேரமாக பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை சிறை

மதுரை மத்திய சிறையில், சோதனை என்ற பெயரில் சிறைவாசிகளைப் போலீஸார் துன்புறுத்துவதாகவும், உணவு உட்பட அடிப்படை வசதிகளை செய்துகொடுக்காமல்,  பணம் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட சிறைவாசிகளுக்கு மட்டும் சிறப்புச் சலுகைகள் வழங்குவதாகக் கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்துக்குச் சென்று வரும் கைதிகளிடம் கஞ்சா உட்பட வேறு ஏதும் பொருள்கள் இருக்கிறதா என்று சோதனை செய்ததால் கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டதாக சிறைத்துறை தரப்பில் கூறப்படுகிறது. 

இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட கைதிகள் சிறை வளாகத்தில் உள்ள கட்டடங்களில் ஏறி நின்று கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறை வளாகத்துக்குள்ளிருந்து வீசப்பட்ட கற்கள் அரசரடி செல்லும் சாலையில் வந்து விழுந்தததால் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சாலையில் கிடந்த கற்கள்

அப்போது சிறை அதிகாரிகளுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியதோடு உடல் முழுவதிலும் பிளேடால் அறுத்து காயம் ஏற்படுத்தியும் சிறைவாசிகள் கலவரம் செய்தனர். திடீர் போராட்டத்தின் காரணமாக சிறைக்கு முன்பாக கற்குவியலாக காணப்பட்டன.  கைதிகளின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,  சட்டம் - ஒழுங்கு இணை ஆணையர் சசிமோகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அதன்பின்பு மதுரை மேற்கு வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது கலவரம் ஒடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக சிறை அதிகாரிகள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க