`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே!' - நீலகிரி விவசாயிகள் வேதனை | Summer rain destroys banana plantations of Nilgris farmers

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (23/04/2019)

கடைசி தொடர்பு:20:45 (23/04/2019)

`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே!' - நீலகிரி விவசாயிகள் வேதனை

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை முக்கிய பணப் பயிராக உள்ளது. தேயிலைக்கு அடுத்தபடியாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் மலைக் காய்கறி விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. கூடலூர், பந்தலூர், மசினகுடி போன்ற பகுதிகளில் வாழை, இஞ்சி, மஞ்சள், நெல் உள்ளிட்டவற்றைப் பயிரிட்டு விவசாயம் மேற்கொள்கின்றனர்.

மழையில் சேதமான வாழைகள்

இந்தநிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான புளியம்பாறை, புளியம் வயல், காப்பிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் நேந்திரன் வாழை பயிரிட்டிருந்தனர். கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மழையின்றி விவசாயிகள் தவித்து வந்தனர். கடந்த 3 நாள்களாகக் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்துவருகிறது. நேற்று இரவு 10 மணியளவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. காற்றின் வேகம் அதிகம் காணப்பட்டதால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த சுமார் 50,000 வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.

மழையில் சேதமான வாழைகள்

இதுகுறித்து புளியம்பாறை வாழை விவசாயி உதயகுமார் கூறுகையில், ``ஓணம் பண்டிகை நேரத்தில் நேந்திரன் வாழைக்கு நல்ல விலை கிடைக்கும். இதனால் நகையை அடகு வைத்து வாழை நட்டு 10 மாதங்களாகப் பராமரித்து வந்தோம். அறுவடைக்கு ஒன்றிரண்டு மாதங்களே உள்ளன. மழை இல்லை என எதிர்பார்த்துக் காத்திருந்தோம். நேற்று இரவு காற்றுடன் பெய்த மழையால் எங்களுடைய 30,000 வாழை மரங்கள் சேதம் அடைந்தன. வாழையைப் பொறுத்தமட்டில் சேதம் ஏற்பட்டால் ஒரு மரத்துக்கு ரூ.300 வரை நஷ்டம் ஏற்படும். இதனால், வாங்கிய கடனை எப்படிச் செலுத்தப்போகிறோம் என்றே தெரியவில்லை.

மழையில் சாய்ந்த  மரம்

தோட்டக்கலைத் துறையினர் முறையாக ஆய்வு செய்து எங்களுக்கு இழப்பீடு வழங்கினால் மட்டுமே எங்களால் விவசாயம் மேற்கொள்ள முடியும். இல்லையென்றால், இதோடு விவசாயத்தைக் கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம்'' எனக் கண்ணீர் வடிக்கிறார். சூறைக்காற்றுடன் பெய்த மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் மரங்களும் பெயர்ந்து விழுந்துள்ளன.