`முறைத்த மதுரை... கொதித்த கொங்கு!' - அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன? | reasons behind admk candidates list delayed

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (23/04/2019)

கடைசி தொடர்பு:08:07 (24/04/2019)

`முறைத்த மதுரை... கொதித்த கொங்கு!' - அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன?

வேலூர் தவிர்த்து, 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. எஞ்சியிருக்கும் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பில் தி.மு.க, அ.ம.மு.க கட்சிகள் விறுவிறுப்பு காட்டிய நிலையில், அ.தி.மு.க தரப்பில் வேட்பாளரை இறுதிசெய்ய ஒரு யுத்தமே நடந்ததாகக் கட்சியினர் கூறுகின்றனர்

அதிமுக வேட்பாளர் பட்டியல்

சூலூர் தொகுதிக்கு கோயம்புத்தூர் முன்னாள் மேயர் செ.ம.வேலுசாமியின் பெயர்தான் அடிபட்டது. அவர் ஜெயித்துவிட்டால், அமைச்சராக வாய்ப்பு உண்டு என்பதால், சூலூர் தொகுதியை அவருக்கு ஒதுக்க கோவை மாவட்ட அமைச்சரான வேலுமணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் தோப்பு அசோகனின் பெயரும் அடிபட்டது. இறுதியில், யாருக்கும் மனக்கசப்பு வரக்கூடாது என்று, மறைந்த சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜின் தம்பியான வி.பி.கந்தசாமிக்கு ‘சீட்’ ஒதுக்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதியைத் தனது ஆதரவாளருக்கு ஒதுக்க வேண்டுமென கரூர் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முட்டி மோதிய நிலையில், செந்தில்நாதன் பெயரை முதல்வரே ‘டிக்’ செய்தாராம். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் கே.சி.பழனிசாமியை எதிர்த்து செந்தில்நாதன் போட்டியிட்டபோது, அவர் வெற்றி பெற்றால் அமைச்சராகிவிடலாம் என்பதால், அப்போது கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில்பாலாஜி உள்ளடி வேலைசெய்து, செந்தில்நாதனைத் தோற்கடித்ததாக அ.தி.மு.க-வில் பேச்சு உண்டு. பழைய பகைக்கு பழி தீர்ப்பதற்காக, செந்தில்நாதனுக்கு கொம்பு சீவி களத்தில் இறக்கியுள்ளது அ.தி.மு.க தலைமை.

அ.தி.மு.க

மதுரை எம்.பி தொகுதியைத் தனது ஆதரவாளர் கோபாலகிருஷ்ணனுக்கு ஒதுக்காததால், திருப்பரங்குன்றம் தொகுதியையாவது தனது ஆதரவாளருக்கு ஒதுக்க வேண்டுமென மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் ராஜு விடாப்பிடியாக நின்றுள்ளார். அத்தொகுதியைத் தனது ஆதரவாளரான முத்துராமலிங்கத்துக்கு பெற்றுத் தர துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸும் காய் நகர்த்தியுள்ளார். செல்லூர் ராஜுவின் பிடிவாதத்தால், அவரது ஆதரவாளரான அவனியாபுரம் பகுதி கழகச் செயலாளர் எஸ்.முனியாண்டிக்கு திருப்பரங்குன்றம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் சேர்மன் சின்னதுரையின் பெயர் அடிபட்டது. அமைச்சர் கடம்பூர் ராஜு பிடிவாதமாக நின்றதால், அவரது ஆதரவாளரான தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க துணைச் செயலாளர் பெ.மோகனின் பெயர் பட்டியலில் இடம்பெற்றது. முதல் ஆளாக மோகனை அழைத்துக்கொண்டு முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜு.

தேர்தல் களப்பணியில் ஒற்றுமையுடன் செயல்பட்டாக வேண்டும் என்று கண்டிப்பு காட்டியுள்ளாராம் முதல்வர். வேட்பாளர் அறிவிப்பே பலத்த இழுபறிக்குப் பிறகு வெளிவந்துள்ளது. களத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.