சக்தி வேடத்தில் வந்து வேட்புமனு தாக்கல்செய்த திருநங்கை! | Transgender files nomination in Thiruparankundram

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (23/04/2019)

கடைசி தொடர்பு:08:00 (24/04/2019)

சக்தி வேடத்தில் வந்து வேட்புமனு தாக்கல்செய்த திருநங்கை!

 திருப்பரங்குன்றம் சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, திருநங்கை பாரதி கண்ணம்மா சக்தி வேடம் அணிந்துவந்தார்.

திருநங்கை பாரதிகண்ணம்மா

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், வருகிற மே 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,  வட்டாட்சியர் பஞ்சவர்ணம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

திருப்பரங்குன்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல்செய்வதற்கு திருநங்கை பாரதி கண்ணம்மா திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வருகைதந்தார். சக்தி வேடமிட்டு வந்த அவர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார். அவருடன் கிறிஸ்தவ, இஸ்லாமிய வேடமிட்ட நபர்கள் உடன் இருந்தனர். சாதி, மதமற்ற மக்களின் பொதுவானவர் என்று உணர்த்த இவ்வாறு வேடமிட்டு வேட்புமனு தாக்கல்செய்ததாக அவர் தெரிவித்தார். மேலும், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், `சமுதாயத்தில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் எனத் தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிடுகிறேன். திருப்பரங்குன்றம் தொகுதியில் பல மாற்றங்களை ஏற்படுத்தப் பாடுபடுவேன்'' என்று தெரிவித்தார்.

மதுரைத் தொகுதி வேட்புமனுத் தாக்கலின்போது பாரதி கண்ணம்மா

மக்களவைத் தேர்தலில் மதுரைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல்செய்யும்போது பாரதி கண்ணம்மா, மீனாட்சியம்மன் வேடமிட்டு  வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.