`இனிமேலாவது ஒழுங்கா இரு!' - ஜாமீனில் வந்த மகனுக்கு புத்திமதி சொன்ன தந்தைக்கு நேர்ந்த கதி | son killed his father near thiruvannamalai

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (23/04/2019)

கடைசி தொடர்பு:07:26 (24/04/2019)

`இனிமேலாவது ஒழுங்கா இரு!' - ஜாமீனில் வந்த மகனுக்கு புத்திமதி சொன்ன தந்தைக்கு நேர்ந்த கதி

மனைவிமீது சந்தேகப்பட்டு, தனது குழந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, சிறைக்குச் சென்ற வாலிபர், ஜாமீனில் வெளியே வந்து தனது தந்தையையும் கோடரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்த கார்த்திகேயன்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் (58). அதே பகுதியில் மளிகைக்கடை  நடத்திவந்தார். இவரின் மகன் கார்த்திகேயன் (30). கூலித் தொழிலாளி. கார்த்திகேயனின் மனைவி ராஜேஸ்வரி. மூவரும் ஓரேவீட்டில் வசித்துவந்துள்ளனர். 

கார்த்திகேயனுக்கும் ராஜேஸ்வரிக்கும் 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. கடந்த 4 வருடங்களாக ராஜேஸ்வரி குழந்தை இல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் முக ஜாடை தன்னைப்போன்று இல்லை என்று மனைவியின்மீது சந்தேகப்பட்டு, ராஜேஸ்வரி நன்றாகத் தூங்கிய நேரம் பார்த்து தன்  கைக்குழந்தையின் தலையை வெட்டிக் கொலை செய்தார் கார்த்திகேயன். `தகப்பனே குழந்தையைக் கொலை செய்துவிட்டானே' என்ற விரக்தியில் ராஜேஸ்வரி, அவரின் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்தச் சம்பவம் நடந்தது கடந்த ஜனவரி மாதம்.
 
இந்நிலையில், இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்த கார்த்திகேயனை, அவரின் தந்தை தனபால் ஏப்ரல் 16-ம் தேதி ஜாமீனில் வெளியே எடுத்தார். அவனை வீட்டுக்கு அழைத்து வந்து, ‘இனிமேலாவது ஒழுங்காக இரு' என்று  புத்திமதி சொல்லியுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த கார்த்திகேயனுக்கு, தன் அப்பா தனபாலுக்கும் மனைவி ராஜேஸ்வரிக்கும் தொடர்பு இருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த தன் தந்தை தனபாலின் கழுத்தைக் கோடாரியால்  வெட்டிக் கொலை செய்துவிட்டு, போலீஸில் சரணடைந்துள்ளார். இதையடுத்து, வானாபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
 
தந்தையையும் மகனையும் வெட்டிக் கொலைசெய்த வாலிபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க