``இந்தத் தேர்தல் முடிந்ததும், அதற்கும் ஒரு கச்சேரி இருக்கிறது!” - கொதிக்கும் ஆர்.எஸ்.பாரதி | R.s.Bharathi press meet in covai

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (24/04/2019)

கடைசி தொடர்பு:16:18 (24/04/2019)

``இந்தத் தேர்தல் முடிந்ததும், அதற்கும் ஒரு கச்சேரி இருக்கிறது!” - கொதிக்கும் ஆர்.எஸ்.பாரதி

"தாசில்தார் சம்பூரணம் உதவி ஆட்சியராகப் பதவி உயர்வு பெற இருக்கின்ற நிலையில் பழிவாங்கப்பட்டிருக்கிறார். அவருக்கு, தி.மு.க பாதுகாப்பாக இருக்கும். தேர்தல் முடிந்ததும் ஒரு கச்சேரி இருக்கிறது” என்று கோவையில் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.பாரதி

தி.மு.க  அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கோவையில்  பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, " நடைபெற இருக்கின்ற நான்கு சட்டமன்ற இடத்தேர்தலை நடத்தக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு, தேர்தல் ஆணையம் உதவியோடு ஆளுங்கட்சியினர் தடுக்க முயன்றனர்.  சுதந்திர இந்தியாவில், தேர்தல் நடத்துவதற்கு நீதிமன்றம் மூலம் அனுமதி வாங்கியது தி.மு.க-தான். குறுக்கு வழியில் என்ன செய்யலாம் என்று  ஆளுங்கட்சியினர் நினைக்கிறார்கள். அதற்கு உதாரணம், மதுரை சம்பவம்தான். ஆளுங்கட்சியினர் எவ்வளவு பணம் செலவு செய்தாலும் சூலூரிலும் தி.மு.க-தான் வெற்றிபெறும்.  எடப்பாடிக்கும் மோடிக்கும் எதிரான அலை நாடாளுமன்றத்தில் எப்படி இருந்ததோ, அதே அலை இடைத்தேர்தலிலும் தொடர்கிறது.

கலைஞர் மறைவிற்குப் பிறகு ஸ்டாலினைத் தலைவராக ஏற்று கட்டுக்கோப்பாகச் செயல்படுகிறோம். அ.தி.மு.க-வில்தான் கருத்து வேறுபாடு உள்ளது. வேலுமணி, தங்கமணிக்கும்தான்   கருத்து வேறுபாடு இருக்கிறது. நாங்கள் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லாமல் வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். மதுரையில் குற்றம் சாட்டப்பட்ட தாசில்தார் சம்பூர்ணம், நல்ல அதிகாரிதான். வேண்டுமென்றே அவர் பழி வாங்கப்பட்டுள்ளார். 

ஒரு பத்துப் பதினைந்து நபர்களை மதுரை கலெக்டர், இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால், யாரும் ஒத்துக்கொள்ளவில்லை என்று தற்போது  தகவல் வந்துள்ளது. தாசில்தார் சம்பூரணம் உதவி ஆட்சியராகப் பதவி உயர்வு பெற இருக்கின்ற நிலையில் அவர் பலிவாங்கப்பட்டுள்ளார். அவருக்கு தி.மு.க பாதுகாப்பாக நிற்கும்” என்று தெரிவித்தார். 
 

தொடர்ந்து, இந்த விஷயத்தில் ஊடகங்கள்தான் துணை நிற்க வேண்டும்.  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் அளவுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் ஆளுங்கட்சியினர் காலம் தாழ்த்துகிறார்கள்.

கூட்டுறவு சங்கத் தேர்தலை முறைகேடாக நடத்தியவரைத்தான் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராகப் பதவி உயர்வு கொடுத்திருக்கிறார்கள். இந்தத் தேர்தல் முடிந்த பிறகு, அதற்கு ஒரு கச்சேரி இருக்கிறது” என்ற ஆர்.எஸ்.பாரதி, உள்ளாட்சித் தேர்தலை நடக்கவிடாமல் தடுத்தது தி.மு.க-தான் என்ற தமிழிசையின் குற்றச்சாட்டுகுறித்து கேட்டதற்கு, ''தமிழிசை பொய் சொல்வதற்காகவே குமரி  அனந்தனுக்கு மகளாகப் பிறந்திருக்கிறார்'' என்றார்.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க