``குடிநீர் விநியோகத்தை ராணுவத்திடம் ஒப்படையுங்கள்!” - ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் தர்ணா | Hand over water supply to military Retired government employee protest

வெளியிடப்பட்ட நேரம்: 09:31 (24/04/2019)

கடைசி தொடர்பு:09:31 (24/04/2019)

``குடிநீர் விநியோகத்தை ராணுவத்திடம் ஒப்படையுங்கள்!” - ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் தர்ணா

புதுக்கோட்டையில், வீடுகளுக்கு முறையாக குடிநீர் வழங்கக்கோரி, நகராட்சி அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தனி மனிதராகத் தர்ணாவில் ஈடுபட்டார்.

அரசு ஊழியரின் தர்ணா

புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியைச் சேர்ந்தவர், சிங்காரவேலு. ஓய்வுபெற்ற அரசு ஊழியர். கடந்த சில தினங்களாக, இவர் வீட்டுக்கு குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவரது இருசக்கர வாகனத்தில் இரண்டு குடங்களை எடுத்துக்கொண்டு, நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த டவுன் போலீஸார் மற்றும் நகராட்சி அலுவலர்கள், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றார்.

சிங்காரவேலு கூறும்போது, ``நகர்ப்பகுதிகளில்கூட குடி நீர் முறையாகக் கிடைக்க நகராட்சி நிர்வாகம் வழிவகை செய்வதில்லை. பலரும் காசு கொடுத்துதான் குடிநீர் வாங்கும்  அவலம் உள்ளது. என் வீன்டுக்கு கடந்த சில வாரங்களாகவே குடிநீர் வரவில்லை. வேறு வழியில்லாமல்தான் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளேன். வீட்டுக்கு இரண்டு குடம் குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் விநியோகத்தை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்" என்றார்.