`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க!'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி | theft in imman annachi house

வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (24/04/2019)

கடைசி தொடர்பு:12:37 (24/04/2019)

`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க!'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி

னியார் தொலைக்காட்சியின் காமெடி ஷோ மூலமாக தமிழக மக்களுக்கு அறிமுகமான இமான் அண்ணாச்சி, தனது நெல்லைத் தமிழ் பேச்சால் அனைவரது வரவேற்பையும் பெற்றார். 2006-ல் `காதல்' திரைப்படம் மூலமாக தமிழ்த் திரையுலகிற்குள் நுழைந்தவர், வேட்டைக்காரன், மரியான், புலி, காக்கிச்சட்டை போன்ற பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகக் கலக்கினார். இவர், அரும்பாக்கம் ராஜீவ் காந்தி தெருவில் வசித்து வருகிறார். கழுத்து, கை எனப் பெரிய பெரிய நகைகளை மாட்டிக்கொண்டு வலம் வரும் இமான் அண்ணாச்சி மீது யார் கண்பட்டதோ, அந்த நகைகள் அனைத்தும் களவு போயுள்ளன.

இமான் அண்ணாச்சி

இதுகுறித்து நம்மிடம் பேசிய இமான் அண்ணாச்சி, ``ஈஸ்டர் பண்டிகை அன்னைக்கு நகையெல்லாம் பெட்டில கழற்றி பீரோவுக்குள்ள வச்சிட்டு, ஒரு வாட்சை மட்டும் கட்டிக்கிட்டு சர்ச் போயிட்டேன். வீட்டுல என் அண்ணன் பசங்க ரெண்டு பேரு, ரெண்டு வேலையாட்கள் தான் இருந்தாங்க. வீட்டுக்கு வந்த பிறகு வாட்சையும் கழற்றி பீரோவுக்குள்ள வச்சுட்டு தூங்கப் போயிட்டேன். பீரோவுக்குள்ள வச்ச நகை இருக்குதானு நான் கவனிக்கல. இரண்டு நாள் கழிச்சு, ஏப்ரல் 22-ம் தேதி நகையைப் போடலாம்னு பெட்டியைத் திறந்தப்பதான், அதுல இருந்த 41 பவுன் நகையும் திருடு போயிருக்குறது தெரிஞ்சது. உடனே அரும்பாக்கம் போலீஸ்ல புகார் கொடுத்திட்டேன்” என்றவரிடம், ``உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா?” என்றோம்.

``என் பீரோவுக்கு இரண்டு சாவி உண்டு. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு சாவி தொலைஞ்சிடுச்சு. அடுத்த ஆறு மாசத்துக்குள்ள 3 பவுன், 1 பவுன்னு நகைகள் காணாமப் போச்சு. வீட்டுல இருந்தவங்கள சந்தேகப்பட முடியல. உடனே பீரோ இருந்த ரூம்ல சி.சி.டி.வி. கேமரா மாட்டினேன். அதுல இருந்து ஒன்றரை வருஷத்துக்கு எந்தத் திருடும் போகல. இப்ப, திடீர்னு 41 பவுன் கொள்ளை போயிருக்குறது அதிர்ச்சியா இருக்குது. ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க சார். அதான் கஷ்டமா இருக்குது. நிச்சயமா என் நகைங்க திரும்ப வந்திரும்னு நம்பிக்கை இருக்குது” என்றார்.

இதுகுறித்து அரும்பாக்கம் போலீஸார் கூறுகையில், ``இமான் அண்ணாச்சி வீட்டிலிருந்து எடுத்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம். வீட்டில் இருப்பவர்களே திருடியிருக்கலாம் என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்துவிடுவோம்” என்றனர்.

சில நாள்களுக்கு முன்பு தி.நகரிலுள்ள நடிகை வடிவுக்கரசியின் வீட்டில் நகைகள் கொள்ளை போயிருந்த நிலையில், தற்போது நடிகர் இமான் அண்ணாச்சியின் வீட்டிலும் கொள்ளை நடந்திருப்பது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. ``சொல்லுங்கண்ணே.. சொல்லுங்க” என்று மக்களை சிரிக்க வைத்தவரை, “கொடுங்கண்ணே.. நகைய கொடுங்க” எனப் புலம்ப வைத்தவர்கள் யாரோ?


அதிகம் படித்தவை