`ஆயுஷ் படிப்புகளுக்கு `நீட்' தேர்வு இல்லை!'- தமிழக அரசு திட்டவட்டம் | No NEET-based admissions for AYUSH courses in TN

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (24/04/2019)

கடைசி தொடர்பு:14:10 (24/04/2019)

`ஆயுஷ் படிப்புகளுக்கு `நீட்' தேர்வு இல்லை!'- தமிழக அரசு திட்டவட்டம்

மிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, யோகா உள்ளிட்ட `ஆயுஷ்' படிப்புகளுக்கு, நீட் தேர்வு அடிப்படையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என இந்திய மருத்துவ முறை குழுமம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஆனால்,  தமிழக அரசிடமிருந்து இதுகுறித்து, எந்த அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. அதனால், ஆயுஷ் மருத்துவம் படிக்கக் காத்திருக்கும்,  மாணவர்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். 

 நீட்

`எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளைப்போல் ஆயுஷ் படிப்புகளுக்கும் 2018-ம்ஆண்டு முதல் நீட் தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என மத்திய ஆயுஷ் அமைச்சகம் கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்தது. அதே நேரத்தில், தமிழகத்துக்குத் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்குத் தமிழக அரசு மூன்று முறை கடிதம் எழுதியது. ஆனால், தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு  நிராகரித்துவிட்டது. அதனால் மாணவர்களும் நீட் தேர்வெழுத வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார்கள். இருந்தபோதும், `தமிழகத்தில் ஆயுஷ் படிப்புகளுக்கு ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும்' என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதன்படியே, கடந்த ஆண்டு தமிழகத்தில் ஆயுஷ் படிப்புகளுக்கு ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தது. கடைசி நேரத்தில் முதல்வரின் இந்த அறிவிப்பால் நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் குழப்பமடைந்தார்கள். 

தேர்வு

இந்த வருடம் வரும் மே 5-ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. ஆனால், ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு இருக்கிறதா, இல்லையா என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. 

இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோவிடம் பேசினோம். ``தமிழகத்தில் ஆயுஷ் படிப்புகளுக்கு இந்தாண்டு நீட் தேர்வு இல்லை'' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க