``இனி, குப்பையைப் பெறுவதற்குக் கட்டணம்!” - தமிழக அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் சென்னை மாநகராட்சி | Chennai corporation take decision on waste management

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (24/04/2019)

கடைசி தொடர்பு:19:57 (24/04/2019)

``இனி, குப்பையைப் பெறுவதற்குக் கட்டணம்!” - தமிழக அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் சென்னை மாநகராட்சி

குப்பை கொட்டுவோரிடமிருந்து கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவுசெய்துள்ளது. சென்னை மாநகராட்சி, இதற்கான ஒப்புதல் கேட்டு தமிழக அரசுக்கு விண்ணப்பித்துள்ளது. குப்பைக்குக் கட்டணம் வசூலித்தால், ஆண்டுக்கு 60 கோடி கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை - குப்பை

சென்னை மாநகராட்சியில், மொத்தம் 15 மண்டலங்கள், 200 வார்டுகளில் 17.11 லட்சம் வீடுகள் இருக்கின்றன. இவற்றிலிருந்து மொத்தமாக ஒரு நாளுக்கு 5 ஆயிரம் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்தக் குப்பைகள், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்குகளில் கொட்டப்பட்டுவருகின்றன. இதனைத் தவிர்த்து, 3 மண்டலங்களில் குப்பை வாங்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், 8 மண்டலங்களில் குப்பைகளைப் பெறும் பொறுப்பு தனியாரிடம் தரப்பட இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு, மத்திய அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகளை உருவாக்கி சில அறிவிப்புகளை வெளியிட்டது. அவ்விதிகளின்படி, உள்ளாட்சி அமைப்புகளில் குப்பைகளை உருவாக்குபவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கலாம் என அறிவித்தது. இதன்படி சென்னை மாநகராட்சி, பொதுமக்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களிடமிருந்து குப்பைகளைப் பெற கட்டணம் வசூலிக்க இருக்கிறது. இதற்காக, சென்னை மாநகராட்சி தமிழக அரசின் ஒப்புதலை எதிர்பார்த்துள்ளது. 

 வீடுகளுக்கு, மாதத்திற்கு 10 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வீட்டின் சதுர அடியைப் பொறுத்து கட்டணம் மாறுபடும். 1000 கிலோவிற்குள் குப்பைகளை உருவாக்கும் திருமண மண்டபங்களுக்கு ஒரு மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாயும், 1,000 கிலோவிற்கு மேல் குப்பைகளை உருவாக்கும் திருமண மண்டபங்களுக்கு மாதத்திற்கு 7500 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். அரசு மற்றும் தனியார் சமூக நலக்கூடங்களில், ஒரு மாதத்திற்கு 1,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். ஓட்டல்களுக்கு 300 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையும், திரையரங்குகளுக்கு 1,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரையும், ஒவ்வொரு கூடுதலான திரைக்கு 750 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரையும் கட்டணமாகப் பெறப்படும். 

சென்னை

 மேலும், நட்சத்திர விடுதிகளுக்கு, 3,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையும், உணவகங்கள் 1,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரையிலும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், 300 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரையும், கடைகளில், 200 முதல் 1,000 ரூபாய் வரையும், திறந்த வெளியில் நடத்தப்படும் நிகழ்ச்சியின் அடிப்படையில், 5,000 ரூபாயும் 20,000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

மருத்துவமனைகளில், 2,000 ரூபாய் முதல் 4,000 ரூபாயும், கல்வி நிறுவனங்களில் 500 - 3,000 ரூபாயும், வழிபாட்டுத் தலங்களில் 500 ரூபாய் வரையும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இவை, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்த பின்னர் குப்பை எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.