`தேர்தல் முடிவுக்குப் பின் எனது அறிவிப்பு இருக்கும்!'- கருணாஸ் சர்ப்ரைஸ் | Will announce my stand after election results, says Karunas MLA

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (24/04/2019)

கடைசி தொடர்பு:16:30 (24/04/2019)

`தேர்தல் முடிவுக்குப் பின் எனது அறிவிப்பு இருக்கும்!'- கருணாஸ் சர்ப்ரைஸ்

``சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசும் நபர்கள் எந்த சமுதாயமாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்'' என முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ் தெரிவித்தார்.

கருணாஸ்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்களை அவதூறாகப் பேசி இணையத்தில்  வெளியிட்டதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது. அவதூறாக பேசி இணையத்தில் வெளியிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், முக்குலத்தோர் புலிப்படையின் நிறுவனர் கருணாஸ் தென்மண்டல காவல்துறை தலைவரிடம் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ``பொன்னமராவதி பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்களை அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், அதே சமூகத்தைச் சார்ந்தவர்கள் சிலர் சுய அரசியல் லாபத்துக்காக அவ்வாறு பேசியதாக தெரியவந்துள்ளது. இது அதிர்ச்சியடைய வைக்கிறது. தேவர் திருமகனார் பெண்களைக் கடவுளாக நினைத்தவர். ஆனால், சிலர் செய்த தவறுகளால் தேவையற்ற பிரச்னை உருவாகியுள்ளது. பொன்னமராவதி பகுதி மக்கள் அன்போடு வாழும்போது, தங்கள் விளம்பரத்துக்காக இவ்வாறு சிலர் செய்துள்ளனர். 

எந்த சமூகத்தினர் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். தற்போது கீழ்த்தனமான செயல்களைச் செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இனி யாரும் இவ்வாறு செய்யாத அளவுக்கு தண்டனை இருக்க வேண்டும். எந்த சமூகத்தையும் யாரும் புண்படுத்தக்கூடாது. தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பல்வேறு சமூகத்தினர் தமிழ்நாட்டில் இருக்கும்போது சமுதாயத்தைப் பற்றி பேசுவது தவறானது. எந்த ஒரு வீடியோவையும் உடனே உண்மை என்று நம்பிவிடக்கூடாது. எது உண்மை என்று உணர வேண்டும். நான் ஏற்கெனவே இருக்கும் அரசியல் நிலைபாட்டில்தான் இருக்கிறேன். தேர்தல் முடிவுக்குப் பின் எனது அறிவிப்புகள் இருக்கும்'' என்றார்.