`பச்சையப்பன் கல்லூரிக்குப் பாவம் இழைத்து வருகின்றனர்’ - உயர் நீதிமன்றம் வேதனை! | Vigilance Department will investigate pachaiyappa college scam says madras hc

வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (24/04/2019)

கடைசி தொடர்பு:17:50 (24/04/2019)

`பச்சையப்பன் கல்லூரிக்குப் பாவம் இழைத்து வருகின்றனர்’ - உயர் நீதிமன்றம் வேதனை!

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் சென்னையில் 6 கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியின் முதல்வர் காளிராஜ் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். அவருக்குப் பிறகு சேட்டு என்பவர் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து கல்லூரி பேராசிரியர்கள் நந்தினி உட்பட 7 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். `முதல்வர் தேர்வு நடைமுறைகளில் வெளிப்படை தன்மை பின்பற்றப்படவில்லை... தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை விதிகள் பின்பற்றப்படவில்லை’ என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது.

அதேபோல, மனுதாரர்கள் தேர்வில் நடைமுறைகளில் பங்கேற்காததால் அவர்களுக்கு வழக்கு தொடர அதிகாரம் இல்லை என்றும் தேர்வு நடைமுறைகள் முறையான விதிகளைப் பின்பற்றி நடைபெற்றதாகப் பச்சையப்பன் அறக்கட்டளைத் தேர்வுக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. `பல்கலைக்கழக மானியக் குழு விதிகளைப் பின்பற்றாமல் தேர்வுக் குழு அமைக்கப்பட்டது, பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளன’ என்று பச்சையப்பா கல்லூரியின் தற்காலிக நிர்வாகி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். இவர்கள் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சேட்டுவின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். 

கல்லூரி முதல்வர் பதவிக்கு விதிகளைப் பின்பற்றி மீண்டும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளும்படி, இடைக்கால நிர்வாகிக்கு உத்தரவிட்ட நீதிபதி, தேர்வு நடைமுறைகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். முதல்வர் தேர்வு நடைமுறையில் முறைகேடுகள் குறித்து மனுதாரர்கள் அளித்த புகார்களை லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பி வைக்க  இடைக்கால நிர்வாகிக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்தப் புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்து தகுந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். உன்னத நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரிக்கு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்கள் பாவம் இழைத்துவருகின்றனர் என நீதிபதி வேதனை தெரிவித்தார்.