``அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் ஒரே வேட்பாளர் செந்தில் பாலாஜி!" - பொன்முடி சூளுரை | Senthil Balaji will win with biggest vote difference by election, says Ponmudi

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (24/04/2019)

கடைசி தொடர்பு:19:00 (24/04/2019)

``அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் ஒரே வேட்பாளர் செந்தில் பாலாஜி!" - பொன்முடி சூளுரை

 

 செந்தில் பாலாஜி வேட்புமனுத்தாக்கல் செய்தபோது...

``22 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் ஒரே வேட்பாளர் செந்தில் பாலாஜிதான்" என்று அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


 செந்தில் பாலாஜி வேட்புமனுத்தாக்கல் செய்தபோது..

கடந்த 18-ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள், காலியாக இருந்த 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. மீதமிருந்த அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதையொட்டி, அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க சார்பில் அந்தக் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி வேட்பாளராக களம்காண்கிறார். அ.தி.மு.க சார்பில் செந்தில்நாதன் என்பவரும், அ.ம.மு.க சார்பில் ஷாகுல் ஹமீதும் போட்டியிடுகிறார்கள். 


 செந்தில் பாலாஜி வேட்புமனுத்தாக்கல் செய்தபோது.

இந்நிலையில், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தி.மு.க வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். முன்னதாக அரவக்குறிச்சி பகுதியில் தேர்தல் பணிமனையைத் திறந்து வைத்துவிட்டு, ஊர்வலமாக அரவக்குறிச்சி கடைவீதி முதல் வட்டாட்சியர் அலுவலகம் வரை வந்த அவருக்கு ஏராளமான தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, முன்னாள் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி, தி.மு.க மாநில விவசாய அணிச் செயலாளர் கரூர் சின்னசாமி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பொன்முடி


வேட்பு மனுத்தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள்  அமைச்சருமான பொன்முடி, ``தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றம் மூலமும், தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியும் அரவக்குறிச்சி உட்பட நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டதன் பேரில், தற்பொழுது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தி.மு.க கூட்டணி சார்பில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்துள்ளார். மொத்தமுள்ள 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வேட்பாளராக செந்தில் பாலாஜி இருப்பார். 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கக் கூடிய தேர்தலாகும். தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாளே தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி கவிழும். மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்பார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. தி.மு.க ஆட்சி அமைந்ததும், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக செந்தில் பாலாஜி அங்கம் வகிப்பார்" என்றார்.