வேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க! - சூலூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர் | candidate ask money to the people for file nomination in Sulur by election

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (24/04/2019)

கடைசி தொடர்பு:20:40 (24/04/2019)

வேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க! - சூலூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர்

சூலூர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட இருக்கும் இளைஞர் ஒருவர் தன்னுடைய வேட்புமனு டெபாசிட் தொகையைக் கட்டுவதற்கு ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்.

சுயேச்சை

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. அதைத்தொடர்ந்து சூலூர், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான வேட்புமனுத் தாக்கலும் தொடங்கிவிட்டது. 

இந்த நிலையில், சூலூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட இருக்கும் பிரபாகரன் என்ற இளைஞர், தன்னுடைய வேட்புமனு டெபாசிட் தொகையைக் கட்டுவதற்கு மக்களிடமே கையேந்தியிருக்கிறார். டெபாசிட் தொகை ரூபாய் 10,000 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், சூலூர் தொகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தலா 1 ரூபாய் என தந்து டெபாசிட் தொகையைக் கட்டுவதற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் பிரபாகரன். இவரின் இந்த முயற்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களில் தொடர்ந்து பகிரப்பட்டும், விவாதிக்கப்படும் வருகிறது.

அவினாசி - அத்திகடவு போராட்டம், கணியூர் சுங்கச்சாவடி போராட்டம், சாமளாபுரம் டாஸ்மாக் போராட்டம் என இதுவரையில் இப்பகுதி சுற்றுவட்டாரங்களில் நடைபெற்ற அனைத்து மக்கள் போராட்டங்களிலும் முன்நின்று இயங்கியவர்தான் இந்தப் பிரபாகரன். மணல் கொள்ளை விவகாரத்தில் தொடர்ந்து போராடியதால், இவருக்கு மணல் மாஃபியாக்களின் மூலம் ஆபத்து இருப்பதாகக்கூறி ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த டெபாசிட் தொகை முயற்சி குறித்து பிரபாகரனிடமே பேசினோம், ``ஜனநாயகத் தேர்தல் இன்றைக்கு பணநாயகமா மாறிடுச்சு. பிரதானக் கட்சிகள் எல்லாம் ஒவ்வொரு தொகுதிக்கும் கோடிக்கணக்குல பணத்தை செலவு பண்ணி தேர்தலில் நிக்குறாங்க. அப்படி நின்று வெற்றி பெற்றதும், ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூபாய் 2 கோடியை அரசாங்கம் கொடுக்குது. பல கோடிகளை செலவு பண்ணி ஜெயிச்சிட்டு, வெறும் 2 கோடியை மட்டும் வெச்சு என்ன பண்றதுன்னுதான் சட்டவிரோத வழிகளில் பணத்தை சம்பாதிக்கப் பாக்குறாங்க எம்.எல்.ஏ-க்கள்.

அதுவே ஊழல் நிரம்பி வழியும் அரசாங்கமா மாத்திடுது. முதலில் பணநாயகத் தேர்தலை மாத்தணும். அதனால்தான் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யவே மக்களிடம் பணத்தைக் கேட்கிறேன். வேட்புமனுத் தாக்கல் செய்ய எனக்கு 1 ரூபாய் கொடுக்கும் ஒவ்வொருத்தரும் தேர்தலிலும் எனக்கு ஓட்டு போடுவாங்கன்னு நம்புறேன். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக இப்பவே என்னிடம் 5,000 ரூபாய் சேர்ந்துவிட்டது. தேர்தல் அரசியலில் பல நல்ல மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என மக்கள் நினைக்குறாங்க. அதற்கு அரசாங்கமும், தேர்தல் ஆணையமும் செவி சாய்க்கணும். பணநாயகத் தேர்தல் ஒழிக்கப்பட்டு, ஜனநாயகத் தேர்தல் மட்டுமே நடக்கணும்” என்று முடித்தார்.