விவசாயியைக் கொன்ற வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை! - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி | Life imprisonment for killing farmers Pudukottai court action

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (24/04/2019)

கடைசி தொடர்பு:21:40 (24/04/2019)

விவசாயியைக் கொன்ற வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை! - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே விவசாயியை வெட்டிக் கொன்ற வழக்கில், அ.தி.மு.க முன்னாள் ஊராட்சித் தலைவர் உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

அன்னவாசல் அருகே கூத்தனிப்பட்டி முருகன் கோயிலில் அன்னதானம் போடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க முன்னாள் ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் தரப்பினர் வரிவசூல் செய்தனர். அதே பகுதி விவசாயி செல்லத்துரை மற்றும் அவரது தரப்பினரிடம் வரிவசூல் செய்யாமல் விழாவை நடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, செல்லத்துரை அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து, இரு தரப்பினரையும் போலீஸார் சமரசம் செய்து வைத்தனர். இவர்களுக்கிடையில் ஏற்கெனவே முன்பகை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், கடந்த 12.5.2017-ல் செல்லத்துரை வீட்டுக்குப் பயங்கர ஆயுதங்களுடன் சென்ற ராஜேந்திரன் தரப்பினர் செல்லத்துரையைச் சரமாரியாக வெட்டினர். இதில், செல்லத்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தடுக்க முயன்ற செல்லத்துரையின் சித்தப்பா புண்ணியமூர்த்தியையும் அரிவாளால் வெட்டினர். புண்ணிய மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில், ராஜேந்திரன் மற்றும் சின்னத்துரை, சதீஸ், ரமேஷ், ஜெயக்குமார், கிருஷ்ணன், ராதா, சிவா உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கிங்ஸ்லி கிறிஸ்டோபர் முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் அளித்த தீர்ப்பில், ``செல்லத்துரையை வெட்டிக் கொன்றதற்காக 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், புண்ணியமூர்த்தியை ஆயுதத்தால் தாக்கி படுகாயம் ஏற்படுத்தியதற்காக, 7 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்புக் கூறினார். இதையடுத்து,7 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.