4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம்! - உற்சாகத்தில் அ.ம.மு.க | election commission alloted gift pack symbol for ttv

வெளியிடப்பட்ட நேரம்: 20:43 (24/04/2019)

கடைசி தொடர்பு:20:51 (24/04/2019)

4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம்! - உற்சாகத்தில் அ.ம.மு.க

நான்கு தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

பரிசுப்பெட்டி


நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில் தங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னம் வழங்க மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து ஏதாவது ஒரு பொதுச் சின்னத்தை அ.ம.மு.க-வுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதன்காரணமாக அக்கட்சிக்குப் பரிசுப்பெட்டிச் சின்னத்தை வழங்கியது தேர்தல் ஆணையம். பரிசுப்பெட்டிச் சின்னத்தின் மூலம் தேர்தலை சந்தித்தது அ.ம.மு.க. `அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைக் கட்சியாகப் பதிவு செய்தால்தான் பரிசுப்பெட்டிச் சின்னத்தை மீண்டும் பெற முடியும்’ என்று எண்ணிய தினகரன், அவசரக் கூட்டத்தைக் கூட்டினார்.

அதில், டி.டி.வி.தினகரன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். இந்நிலையில், மே19-ம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப்பெட்டிச் சின்னத்தையே மீண்டும் வழங்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யபட்டது. அதன்படி, 4 தொகுதிகளிலும் போட்டியிடும் அ.ம.மு.க வேட்பாளர்களுக்குப் பரிசுப்பெட்டிச் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.