பூச்சி மருந்து கலந்த தண்ணீர் குடித்த புள்ளிமான்கள் பலி! - குடிநீர் தேடிவந்தபோது நேர்ந்த சோகம் | Deer's are died of drinking condaminated water in nellai

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (24/04/2019)

கடைசி தொடர்பு:22:30 (24/04/2019)

பூச்சி மருந்து கலந்த தண்ணீர் குடித்த புள்ளிமான்கள் பலி! - குடிநீர் தேடிவந்தபோது நேர்ந்த சோகம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள புள்ளிமான்கள் பூங்காவில் போதிய தண்ணீர் இல்லாததால், தாகம் தணிக்க வெளியேறிய மான்கள் பூச்சி மருந்து கலந்த தண்ணீரைக் குடித்ததால் உயிரிழந்தன.

புள்ளிமான்கள்

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் புள்ளிமான் பூங்கா செயல்பட்டு வருகிறது. 441.16 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மான் பூங்கா நெல்லை மதுரை தேசிய நெடுஞ்சாலையின் அருகே இருக்கிறது. இந்த மான் பூங்காவின் சுற்றுச் சுவர்கள் பராமரிப்பின்றி இடிந்து கிடப்பதால் மான்கள் வெளியே வரும்போது கனரக வாகனங்களில் மோதி பலியாகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.

அத்துடன், புள்ளிமான் பூங்காவின் உள்ளே நீர் நிலைகள் வறண்டு கிடப்பதால் தண்ணீர் தேடி வரும் மான்கள் அருகில் உள்ள கிராமத்துக்குள் நுழைகின்றன. அவற்றை நாய்கள் விரட்டிச் சென்று வேட்டையாடிக் கொல்கின்றன. இதைச் சரி செய்யும் வகையில், கடந்த 2012-ம் ஆண்டு 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சுற்றுச்சுவர் அமைத்தல், பழைய சுற்றுச்சுவர்களைப் பராமரித்தல், மான்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், போதிய பராமரிப்பு இல்லாததால் தற்போது மான்கள் அங்கிருந்து வெளியேறும் சம்பவங்கள் நடக்கின்றன.

பலியான மான்


பூங்காவில் இருந்து வெளியேறும் மான்கள், கங்கைகொண்டான் சுற்று வட்டாரப் பகுதியில் மட்டுமல்லாமல், ராணி அண்ணா கல்லுரி வளாகம், மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழக வளாகம் உள்ளிட்ட பகுதிகளிலும் நடமாடுகின்றன. இந்த நிலையில், புங்கனூர் கிராமத்தின் காட்டுப் பகுதியில் இரு மான்கள் இறந்து கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததால், வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

வனத்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், பூங்காவில் இருந்து வெளியேறிய மான்கள், வயல் வெளிகளில் செடிகளுக்குத் தெளிக்கப்பட்ட பூச்சி மருந்து கலந்த தண்ணீரைக் குடித்ததால் உயிரிழந்திருக்கக்கூடும் எனத் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே கடந்த வாரத்தில் இதே பகுதியில் மான்கள் பலியான நிலையில், மீண்டும் மான்கள் உயிரிழந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக கங்கைகொண்டான் போலீஸாரும் வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.