தமிழகத்தில் முதல்முறை! - வாயு மூலம் மயக்க மருந்து செலுத்தி நாய்க்கு அறுவைசிகிச்சை | For the first time in TN doctors done operation to dog with the help of sevoflurane

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (24/04/2019)

கடைசி தொடர்பு:11:19 (25/04/2019)

தமிழகத்தில் முதல்முறை! - வாயு மூலம் மயக்க மருந்து செலுத்தி நாய்க்கு அறுவைசிகிச்சை

தமிழகத்திலேயே முதன்முறையாகச் சேலம் கால்நடை பன்முக மருத்துவமனையில் ரோஸி என்ற நாய்க்கு சேவோஃப்ளூரேன் வாயு மூலம் மயக்க மருத்து செலுத்தி அறுவைசிகிச்சை மூலம் கர்ப்பப்பையை அகற்றியிருக்கிறார்கள். 

நாய்க்கு அறுவைச் சிகிச்சை

இதுபற்றி சேலம் மண்டல உதவி இயக்குநர் தேவேந்திரன்,``எங்க கால்நடை மருத்துவமனையில் தினந்தோறும் சுமார் 120 செல்லப் பிராணிகளுக்கும் 50 பெரிய பிராணிகளுக்கும் பல்வேறு விதமான அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் பல்வேறு கால்நடைகள் மேல்சிகிச்சைக்காக, குறிப்பாக செல்லப் பிராணிகளில் தேவைப்படும் அறுவைசிகிச்சைக்கு அதிக எண்ணிக்கையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பரிந்துரைக்கப்படுகிறது.

நாய்க்கு அறுவைச் சிகிச்சை

இம்மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள செல்லப்பிராணிகளுக்கு அதிநவீன கருவிகள் மூலம் பாதுகாப்பாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு குணமாக்கப்படுகிறது. இப்படிக் கால்நடைகளுக்கு, குறிப்பாக செல்லப் பிராணியான நாய்களுக்கு ஊசிகள் மூலம் மயக்க மருத்து செலுத்தியே அறுவைசிகிச்சை செய்து வந்தோம். ஊசிகள் மூலம் மயக்க மருத்து செலுத்துவதன் மூலம் அறுவைசிகிச்சை செய்துகொண்டிருக்கும்போதே கால்நடைகளுக்கு மயக்கம் தெளிந்துவிடும். வலி தாங்க முடியாமல் சத்தமிடும் இதனால் ஆபரேஷன் செய்ய முடியாத நிலை ஏற்படும். மயக்க மருத்து சற்று அதிகமாகக் கொடுத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்படும்.

கால்நடைத்துறையில் புதிய தொழில்நுட்ப வசதியுடன் தமிழகத்தில் முதன்முறையாகச் சேலம் கால்நடை மருத்துவமனையில் சேலம் மண்டல இணை இயக்குநர் மருத்துவர் புருஷோத்தமன் தலைமையில் துணை இயக்குநர் மருத்துவர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர் மருத்துவர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலையில் மருத்துவக் குழுவினர் ரோஸி என்ற நாய்க்கு சேவோஃப்ளூரேன் வாயு மூலம் மயக்க மருத்து செலுத்தி வெற்றிகரமாகக் கர்ப்பப்பையை அகற்றி இருக்கிறோம். இதனால் கால்நடைகளுக்கு அறுவைசிகிச்சை செய்யும் வரை இடையில் மயக்கம் தெளியாது. இதனால் கால்நடைகளுக்கு வலி இருக்காது. தமிழகத்திலேயே முதன்முறையாகச் சேலத்தில்தான் இந்த முறையைப் பயன்படுத்தி அறுவைசிகிச்சை செய்திருக்கிறோம்'' என்றார்.