ஒட்டப்பிடாரம் அ.தி.மு.க வேட்பாளரை மாற்ற வேண்டும்! - போர்க்கொடி தூக்கும் பெண் நிர்வாகி! | Replace the ottapidaram AIADMK candidate says lady party administrator

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (25/04/2019)

கடைசி தொடர்பு:08:31 (25/04/2019)

ஒட்டப்பிடாரம் அ.தி.மு.க வேட்பாளரை மாற்ற வேண்டும்! - போர்க்கொடி தூக்கும் பெண் நிர்வாகி!

 ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கு அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோகனுக்குப் பதிலாக, வேறு வேட்பாளரை அறிவிக்க வேண்டும் எனப் பெண் நிர்வாகி ஒருவர் போர்க்கொடி தூக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெண் நிர்வாகி

 

தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளில் ஒட்டப்பிடாரம் தொகுதியும் ஒன்று. தி.மு.க சார்பில் சண்முகையா, அ.தி.மு.க சார்பில் மோகன், அ.ம.மு.க சார்பில் சுந்தர்ராஜ் மற்றும் நாம்தமிழர் கட்சியின் சார்பில் அகல்யா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க-வில் சீட் பெற முன்னாள் எம்.எல்.ஏ மோகன், நெல்லை-தூத்துக்குடி ஆவின் சேர்மன் சின்னதுரை ஆகியோர் முட்டிமோதினர். ஆனால், இறுதியில் மோகனுக்கே சீட் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மோகனுக்கு சீட் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒட்டப்பிடாரம் ஒன்றிய இளம்பெண்கள் பாசறை தலைவி ஜெயலலிதா தலைமையில் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, ``இந்தத் தொகுதிக்கு அ.தி.மு.க சார்பில் வேட்பாளராக கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ள மோகன், கடந்த முறை எம்.எல்.ஏ-வாக இருந்தபோது அவர் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இதனால் தொகுதிக்குள் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கட்சியினரையும் அவர் மதிப்பதில்லை.

மக்கள்

கட்சிக்குள் பெரும்பான்மையான தொண்டர்கள் மோகன் மீது அதிருப்தியில் உள்ள நிலையில், தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களில் நானும் அடக்கம். நேர்காணலுக்கு எனக்கும் அழைப்புவிடுக்கப்பட்டது. அமைச்சர் கடம்பூர் ராஜு, கடைசி வரையிலும் எனக்குதான் சீட் கிடைக்கும் எனச் சொன்னார். ஆனா, கடைசி நேரத்துல மோகனை வேட்பாளரா அறிவிச்சுட்டாங்க. மோகனைத் தவிர விருப்பமனு அளித்தவர்களில் வேறு யாரை வேண்டுமானாலும் கட்சித்தலைமை வேட்பாளரா அறிவிக்கட்டும்” என்றார்.

``சீட் கிடைக்காத ஆதங்கத்துலயும், மோகனுக்கு சீட் கிடைச்ச அதிருப்தியிலயும் அப்படிப் பேசுகிறார் ஜெயலலிதா” என வழக்கம்போல, காரணம் சொல்கிறார்கள் கட்சியினர். இதேபோல, நடந்து முடிந்த விளாத்திகுளம் சட்டமன்றத் இடைத்தேர்தலில், அ.தி.மு.க சார்பில் சீட் பெற முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மார்க்கண்டேயனும், சின்னப்பனும் மோதினார்கள். ஆனால், அமைச்சர் கடம்பூர் ராஜுவின் ஆசியால் சின்னப்பனுக்கு சீட் கிடைத்தது. தனக்கு சீட் கிடைக்காத மார்க்கண்டேயன், சுயேச்சையாகப் போட்டியிட்டார்.

``கடைசி வரை கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பேன்” என ஜெயலலிதா சொன்னாலும், விளாத்திகுளத்தைப் போல,  ஒட்டப்பிடாரத்திலும் சுயேச்சை போட்டியிடும் நிலைமை வந்துவிடக் கூடாது என்கின்றனர் கட்சியினர். இதை சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜெயலலிதாவை  சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளாராம். வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என பெண் நிர்வாகி  போர்க்கொடி தூக்கியுள்ளதால், பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது

நீங்க எப்படி பீல் பண்றீங்க