இலஞ்சி கோயில் யானை உயிரிழந்த விவகாரம் - விசாரணை நடத்த பக்தர்கள் கோரிக்கை! | Devotees are sad about the demise of the temple elephant in Nellai district

வெளியிடப்பட்ட நேரம்: 22:50 (24/04/2019)

கடைசி தொடர்பு:08:21 (25/04/2019)

இலஞ்சி கோயில் யானை உயிரிழந்த விவகாரம் - விசாரணை நடத்த பக்தர்கள் கோரிக்கை!

நெல்லை மாவட்டத்தில், கோயில் யானை உயிரிழந்த சம்பவம் பக்தர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த யானையைக் கோயில் நிர்வாகம் முறையாகப் பராமரிக்கத் தவறிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோயில் யானை

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருக்கிறது, இலஞ்சி கிராமம். அங்கு, பழைமை வாய்ந்த திருவிலஞ்சிகுமரன் ஆலயம் அமைந்துள்ளது. அகத்திய முனிவர் வழிபாடு நடத்தியதாகக் கருதப்படும் இந்தக் கோயிலுக்கு, கடந்த 2005-ம் ஆண்டு, இரண்டு யானைகள் கடம்பூர் ஜமீன் சார்பாகத் தானமாக வழங்கப்பட்டன. வள்ளி, தெய்வானை எனப் பெயரிடப்பட்ட அந்த குட்டி யானைகளைக் கண்டு பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கோயிலுக்கு இலவசமாக வழங்கப்பட்ட யானைகளுக்கு, உணவுப் பொருள்களைக் கொண்டு வருவதற்காக மாட்டு வண்டி, மாடுகள் மற்றும் தேவையான அளவுக்குப் பணம் அனைத்தும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு தெய்வானை யானை உடல்நலம் குன்றி உயிரிழந்தது. அப்போது, யானைகளைக் கோயில் நிர்வாகத்தினர் முறையாகப் பராமரிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்து ஓய்ந்தது.

இந்த நிலையில், வள்ளி யானைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உணவு உண்பதிலும் செரிமானத்திலும் குறைவு ஏற்பட்டதால், வள்ளி யானை பலவீனம் அடைந்தது. அந்த யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், 23-ம் தேதி யானைப்பாகன் நடைப்பயிற்சிக்காக வள்ளி யானையை அழைத்துச்சென்றபோது மயங்கிச் சரிந்தது. கோயில் வளாகத்தில் யானை விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், அதை எழுப்ப முயன்றனர். ஆனால், உடலில் போதிய சக்தி இல்லாததால் வள்ளி யானையால் எழ முடியவில்லை.

இறுதி அஞ்சலி

பின்னர், கால்நடை மருத்துவர்கள் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் யானையைப் பரிசோதித்துப் பார்த்து, உயிரிழந்துவிட்டதாக அறிவித்ததால் பக்தர்கள் கதறி அழுதனர். பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த வள்ளி யானை, இன்று (24-ம் தேதி) அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து, கண்ணீர் மல்க அஞ்சலிசெலுத்தினார்கள்.

இலஞ்சி கோயில் யானைகள் உயிரிழந்த சம்பவத்தால், கோயில் நிர்வாகத்தினர்மீது பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர். வள்ளி யானை நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், அதற்குப் போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனப் பக்தர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். உடல்நிலை சரியில்லாத யானையை முறையாகப் பராமரித்திருந்தால் காப்பாற்றி இருக்க முடியும் என ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். 

பக்தர்கள்

இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் அனைத்துக் கோயில்களிலும் உள்ள யானைகளைக் கண்காணிக்கத் தனி ஆணையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த ஆணையத்தின்மூலம் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களைக் கொண்டு, அடிக்கடி யானைகளைப் பரிசோதனை செய்ய வேண்டும். அதன் மூலமாக மட்டுமே தமிழகத்தின் திருக்கோயில்களில் இருக்கும் யானைகளைக் காப்பாற்ற முடியும்" என்று ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.