`என் மனைவி பிரிந்துசென்றதற்கு நீதான் காரணம்!’ - தந்தையை குத்திக்கொன்ற மகன் | The son who killed the father near vellore

வெளியிடப்பட்ட நேரம்: 22:33 (24/04/2019)

கடைசி தொடர்பு:07:14 (25/04/2019)

`என் மனைவி பிரிந்துசென்றதற்கு நீதான் காரணம்!’ - தந்தையை குத்திக்கொன்ற மகன்

அரக்கோணம் அருகே, மனைவி பிரிந்துசென்ற ஆத்திரத்தில் தன்னுடைய தந்தையை, மகனே குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பஞ்சாட்சரம்

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பாணாவரம் பள்ளமங்கலத்தைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம் (85), விவசாயி. இவரின் மகன் ஏழுமலை (39) சிற்ப வேலை செய்துவருகிறார். இவர், தினமும் மது அருந்திவிட்டு தன்னுடைய மனைவி கலைச்செல்வியை துன்புறுத்தியிருக்கிறார். வயதான தன் தந்தையுடன் மனைவிக்குத் தொடர்பிருப்பதாக உறவை கொச்சைப்படுத்திப் பேசியிருக்கிறார். இதுதொடர்பான தகராறில், சமீபத்தில் ஏழுமலையைப் பிரிந்து அவரின் மனைவி கலைச்செல்வி தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

மனைவி பிரிந்துசென்றதற்கு தன் தந்தைதான் காரணம் என்று சந்தேகப்பட்டு ஆத்திரத்தில் இருந்தார் ஏழுமலை. இந்த நிலையில், விவசாய நிலத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த தந்தை பஞ்சாட்சரத்தைக் கொடூரமாகத் தாக்கிய ஏழுமலை, இரக்கமின்றி கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலைசெய்தார். பின்னர் ஆத்திரம் தணிந்து, ‘ஐயோ, அப்பாவைக் கொலை செய்துவிட்டேனே’ என்று உறவினர்களிடம் புலம்பியிருக்கிறார். உறவினர்கள் கூட்டுசேர்ந்து கொலையை மறைக்கத் திட்டம் தீட்டினர்.

ரத்த வெள்ளத்தில் சரிந்துகிடந்த பஞ்சாட்சரத்தின் உடலை போலீஸுக்குத் தெரியாமல் எரிக்க முயன்றனர். அதற்குள்ளாக கிராமத்தைச் சேர்ந்த சிலர், பாணாவரம் போலீஸாருக்கு ரகசியமாகத் தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப் பதிவுசெய்து ஏழுமலையைப் பிடித்து தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.


அதிகம் படித்தவை